கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *