இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!
நிதித் தரநிர்ணய நிறுவனமான பிச் ரேற்றிங் (Fitch Rating) இலங்கையினுடைய கடன்பெறு தகுதியை அதிகரித்துள்ளது. 2022இல் நாட்டினுடைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அதனுடைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் கையிருப்பு இல்லாமல் ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.
இலங்கையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் சர்வதேச நாணயநிதியம் கடனின் வட்டியையும் முதலையும் தங்களுக்கு சேதமில்லாமல் பெறுவதற்கான, கடன் மீள்செலுத்துகையை மீள்வரைபு செய்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடும் எட்டப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பாதகமில்லாமல் அல்லது மக்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகளை கூடியவரை குறைத்து இந்த கடன் மீள்செலுத்துகையை மேற்கொள்ள பல ஆடம்பரச் செலவீனக் குறைப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்தமைக்கு தற்போது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை Issuer Default Rating (IDR), ‘RD’ (Restricted Default) இல் இருந்து ற்கு ‘CCC+’ ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை பெரும்பாலான நாடுள் நிறுவனங்களோடு கடன் மீள்வரைபை மேற்கொண்டுவிட்டது. அதனால் கடன் மீள்செலுத்துகையில் இலங்கைக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. 2026இல் இலங்கையின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என பிச் ரெற்றிங் மதிப்பிடுகின்றது. அத்தோடு அரசின் கடனுக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 90மூ 2028இல் குறையும் என்றும் இதற்கான வட்டிக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 2021 இல் 67மூ இல் இருந்தது 42மூ ற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சிசிசி ரேற்றிங்கில் உள்ள நாடுகளில் இவ்விகிதாசரம் 16மூ ஆக இருக்க வேண்டும். இன்னமும் இலங்கையின் இந்த விகிதம் மிக உயர்வாகவே உள்ளது.
அதேசமயம் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் மொத்த தேசிய உற்பத்திக்குமான விகிதாசாரம் 2023இல் 11மூ ஆக இருந்து 2026இல் 15மூ ஆக உயரும் எனவும் பிச் ரேற்றிங் மதிப்பிட்டுள்ளது. இலங்கையுடைய பொருளாதார வளர்ச்சி 2022இல் 7.4 வீதமாக இருந்து 2023 இல் 2.2 வீதமாகச் சுருங்கியது. 2025 – 26 இல் இது 3.6 முதல் 4.2 வீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவீக்கம் 2022இல் 67 வீதமாக இருந்து 2025 – 26 இல் 5 வீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தரவுகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் பொருளாதார நிலையில் சரியான பாதையில் இருந்தாலும் அபாயங்கள் முழுமையாகக் கடக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசமும் புதிய அரசுக்கு இல்லை.