கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.
தேசம்நெற்க்கு தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்.
சூழலியல், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கின்றது. “கிளிநொச்சியில் சட்டம், ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், கிளிநொச்சியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், கசிப்பு காய்ச்சுவது, கள்ள மண் கடத்துவது, கள்ள மரம் வெட்டுவது என்பனவற்றுக்;கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர் மு தமிழ்ச்செல்வன். அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு சமூகக் காவல்காரன். இவரைத் தாக்கியது ஒட்டுமொத்த ஊடக சமூத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தேசம்நெற் ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் த ஜெயபாலன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடமாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றது. ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல், மக்களின் குரல்களை மழுங்கடிப்பதற்கான ஒரு முயற்சியே” என்றும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் பொலிஸாருடன் பேசி வடக்கில் இவ்வாறான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனைத் தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வடக்கு ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.