ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !
பா உ அர்ச்சுனாவுக்கும் சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வர அமைச்சர் சந்திரசேகரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். டிசம்பர் 26 நேற்று, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இனிமேல் பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அமைச்சர் உங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி, வைத்தியர் அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.
கிளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வழமை போல கல்வித் தகமை உள்ளதா..?, நீங்கள் மக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்? தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து, அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசாவை பா.உ அரச்சுனா பேச, தம்பி தம்பிராசாவும் எதிர்த்துப்பேசவே கூட்டம் அமைதியையிழந்ததது.