வன்னியிலிருந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதை நிறுத்தி தினமும் அவர்கள் தமக்குரிய உணவை தாமே சமைத்துக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவுள்ளது.
நேற்று வவுனியா கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. தினமும் சமைத்த உணவை வழங்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்கள்.
அத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்குவது, நேரம் பிந்தி வழங்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எத்தனை நாட்களுக்கு சமைத்த உணவை வெளியிடங்களிலிருந்து பெறுவது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதேநேரம், உணவை சமைக்கும் போது தற்போதைய கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களே தமக்குரிய உணவை சமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.