மாகாண சபை தேர்தல்களை அடுத்து ஆண்டு நடுப்பகுதியில் நடாத்த திட்டமிடும் என்.பி.பி !
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்து செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகு தான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளை தொடர முடியாது பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகிறது. ஆனால் அச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவே தான் அந்த ஏற்பாடுகளை திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் முதல் கொண்டு அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, மாகாண சபை தேர்தல்களை மீள அதன் அதிகாரங்களுடன் இயங்க செய்வது குறித்து உறுதியளித்து வருகின்றனர். தமிழர்கள் போராடி பெற்ற மாகாண சபை முறையை ஒருபோதும் நாங்கள் தடுக்கப்போவதில்லை எனவும் மாகாண சபை அதிகாரங்களுக்கு மேலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.