ஜனாதி பதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ. இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்தனர்.
புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் வன்னி அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சஹணகம (நிவாரணக்கிராமம்) இடைத்தங்கல் முகாம் வேலைகளையும் பார்வையிட்டனர்.
இந்த முகாமில் இருபதாயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேரை குடியமர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நலன்புரி நிலையத்தின் வேலைகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் முதலில் 10 ஆயிரம் பேரை இங்கு குடியமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனையவர்களை வேறுஇடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசகர், ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் புல்மோட்டையில் இயங்கும் இந்திய தளவைத்தியசாலைக்கும் சென்று அங்கு சிகிச்சை பெறும் வன்னிமக்களையும் பார்வையிட்டனர். இதேவேளை, இந்திய டாக்டர்கள் ஐவர் இங்கிருந்து செல்வதால் புதிய டாக்டர்கள் பொறுப்பேற்றனர்.