அரசாங்கம் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி வடக்கின் யுத்தத்தின் மூலம் பெற்றுள்ள வெற்றியை நிரந்தர வெற்றியாகக் கருதிவிட முடியாது. அம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சம உரிமைகளையும் சம அந்தஸ்தையும் வழங்கி அவர்களின் மனதை ஆட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வெற்றியே நிரந்தரமானது, உண்மையுமான வெற்றியாகும். எனவே அரசும் யுத்தத்தில் ஆர்வம் காட்டிவரும் பெரும்பான்மை சமூகத்தினரும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுப்பது அவசியமானதாகும் என மாத்தளை மாநகர சபை உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
கடந்த மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் நகரபிதா முகம்மது ஹில்மி கரீம் தலைமையில் மாத்தளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அவர் தெடார்ந்து பேசும் போது குறிப்பிட்டதாவது;
கடந்த 3 தசாப்தங்களாக நிலவிவந்த யுத்தத்திற்கு முடிவுகட்டி வடக்கிலும் நாட்டிலும் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும். இருப்பினும் கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் அப்பகுதியை மீட்டெடுத்து அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சியினால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன, எத்தனை மில்லியன் ரூபா சொத்துக்கள்? அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை குடும்பப் பெண்கள் விதவையாகியுள்ளனர்? எத்தனை பேர் அங்கவீனர்களாயுள்ளனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாகி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இதனைப் போரை விரும்பி ரசிக்கும் பெரும்பான்மை சமூகத்தினரும், அரசாங்கமும் உணரவேண்டும். எனவே இந்த யுத்தத்தினால், நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிரந்தர வசிப்பிடம், அடிப்படைத் தேவை, தொழில் வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான வழிவகுப்பும், சம உரிமை, சம அந்தஸ்து என்பவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.