நத்தார் தினத்தில் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து – 2 வயது குழந்தையையடுத்து 34 வயது தாயும் பலி !
கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த தாய் நேற்று 02 உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.