வடக்கு மாகாண கல்வி அமைச்சில் உணவிலும் ஊழல் மோசடி – ஆசிரியர் முன்சேவை பயிற்சியில் பல மில்லியன் ஊழல்.?

மாணவர்களுக்கான இலவச உணவில் ஊழல், பெண் ஆசிரியர்களிடமும் அடாவடி- கொட்டடி அதிபருக்கு எதிராக அனுரவிடம் முறைப்பாடு

ஊழலில் ஈடுபட்டுவந்த யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபர் வினாசித்தம்பி சிவனேசனுக்கு எதிராக ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றும் அதிபர் வி. சிவனேசன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு உட்பட பல்வேறு விடயங்களில் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பில் இரு வருடங்களுக்கு முன்பே எழுத்து மூல முறைப்பாட்டை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக மட்ட அமைப்பினர் இணைந்து ஆளுநருக்கு வழங்கியிருந்தபோதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்தே ஜனாதிபதிக்கு இதுகுறித்து கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாய்மையடைந்திருந்த ஆங்கில ஆசிரியர் ஒருவரை மலசல கூடத்தில் வைத்து பூட்டியமை, பெண் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள்  முன்னிலையில் அடிக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வலயக்கல்வி பணிமணைக்கு புகாரளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இவற்றைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் மாணவர்களது எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015இல் 400 மாணவர்களாக இருந்த தொகை 2022இல் 202 ஆக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6மாணவர்கள் மாத்திரமே தரம் 1இல் சேர்ந்துள்ளனர்.

வடக்கில் கஸ்டப் பிரதேச பாடசாலைகளை முன்வைத்து இவ்வாறான பல ஊழல் முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இவற்றில் கோட்டக்கல்வி, வலயக்கல்வி என மேல்மட்டத்தினரும் தொடர்புபட்டிருப்பதால் இவை மூடிமறைக்கப்படுகின்றன என தேசம்நெற்க்கு ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அந்த ஆசிரியர்.  பாடசாலையில் வழங்கப்படும் இலவச உணவுக்காக பாடசாலை செல்லும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் வடக்கில் உள்ளனர். இவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையை கவனத்தில் கொண்டே உலக உணவுத்திட்டத்தின் ஏற்பாட்டிலும் மேலும் பல புலம்பெயர்  தன்னார்வ அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் மாணவர்களுக்கான இலவச உணவுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சத்துணவாக முட்டை, மீன், நெத்தலி ஆகியவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட பல பாடசாலைகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுவது கிடையாது. உதவித்திட்டங்களை வழங்குவோர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் போது விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றது. குறித்த உணவுக்கான பணம் ஏதோ ஒருவகையில் களவாடப்படுகிறது. சில பாடசாலைகளில் மாணவர்களின் இலவச உணவுக்காக வழங்கப்படும் பணத்தில் தான் மதில் கட்டுதல் தொடங்கி ஆசிரியர் அதிபர் கௌரவிப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சில் பல குறைபாடுகள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்சேவைப்பயிற்சி செயலமர்வுகள் கோப்பாய் தேசிய கல்வியற்கல்லூரியில் நடைபெற்றிருந்தது. 10 நாட்களுக்கான மொத்த செலவு சுமார் 90 லட்சம் ரூபாய் என வடக்கு மாகாண கல்வி திணக்கள பணிப்பாளர் நிகழ்வு அங்குரார்ப்பண விழாவில் தெரிவித்திருந்ததாகவும் எனினும் உணவின் தரம் மிகக்கீழான நிலையில் காணப்பட்டதாகவும் பல ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.நாளொன்றுக்கு ஆசிரியர் ஒருவருக்கான உணவுக்கான பணம் ரூபாய் 2000 வரை செலவிடப்படுதாக கூறிய போதும் கூட அதற்கேற்றதான உணவு வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் சிலர் முன்சேவை பயிற்சி காலத்தின் போதே ஏற்பாட்டுக்குழுவினருடன் முரண்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. எனினும் இது தொடர்பில் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேசிய வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு கந்தையா பிரட்லி ஜெனட் ஆசிரியர்கள் தாபன விதிக்கோவைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் அது மீறினால் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் பகிரங்கமாக எச்சரித்திருந்தததாக அறிய முடிகிறது. குறித்த முன்சேவை பயிற்சி செயற்றிட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும்  அறிய முடிகிறது.

ஊழல் மலிந்து போயுள்ள வடக்கின் அனைத்து அரச துறைகளிலும் தான் முதலில் சிஸ்டம் சேஞ்ச் வரவேண்டும் என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் முன்னாள் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தெரிவித்திருந்தார். பாசாலை அதிபர் தொடங்கி மாகாண கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் வரை உணவுத்திட்டம் என்ற பெயரில் ஊழல் செய்வது கல்விச்சமூகத்தின் நிலை தொடர்பில் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. ஊழல் ஒழிப்பு என்ற கொள்கையுடன் நாட்டில் ஆட்சியேற்றுள்ள  புதிய அரசாங்கம் இவ்வாறான ஊழல்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளிக்கு

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *