எந்த தடை வந்தாலும் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது – இலங்கை பொலிஸ் !
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாகவும், 2024 டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க, தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க, உயிரிழக்கும் வீதி விபத்துக்கள் நாளொன்றுக்கு 04 முதல் 05 சம்பவங்கள் வரை குறைந்துள்ளது. பாரதூரமான விபத்துக்கள் அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளானவை 08-10 சம்பவங்களாக குறைந்துள்ளது. வாகனங்களின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் தமது வாகனங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத பாகங்களையும் அகற்றுமாறு மேலும் கோரியுள்ளார்.
இந்த வாகன நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் தடுக்க முற்பட்டாலும், இலங்கை பொலிஸ் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தால் தங்களது தொழில்துறை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பொலிஸ்மா அதிபரை சந்திக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ், சிவில் உடையில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகள் பேருந்துகளை ஆய்வு செய்வதுடன், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளை எச்சரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், பொலிஸ் சோதனைகள் காரணமாக தங்களது பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது.