முல் லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் கடற்கரையோரமாக தற்போது புலிகள் 5 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் படையினர் விமானக் குண்டொன்றை கண்டுபிடித்ததாகவும் இது புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தும் ரகத்தைச் சேர்ந்த குண்டெனவும் படைத்தரப்பு கூறியது.
இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதும் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களிடம் விமானங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்களில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.
இதேநேரம், கடந்த மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு முதலியார்குளம் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது புலிகளின் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எட்டுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இலகுரக விமானமொன்றை வைத்திருக்கும் சாத்தியங்களிருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறியிருந்தன. எனினும் அதனைப் படையினர் மறுத்துள்ளனர்.