மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே அந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் பேர்லின் மற்றும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தாக்குதல்களுக்கிலக்காகின.
இதையடுத்தே மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நாடுகளிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கை அரசுபல்வேறு அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.