வெசாக் வார காலத்தில் ஏனைய மத உற்சவங்கள் நடைபெறக்கூடாது என்பது அரசியலமைப்புக்கு முரணானது – நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை

sri-lanka-upcountry.jpgபௌத் தர்களின் வெசாக் வாரத்தையொட்டிய காலப்பகுதியில் ஏனைய மதத்தவரின் உற்சவங்கள் நடைபெறக்கூடாதென்ற மனோபாவம் சகல மதங்களையும் பாதுகாத்து சகல மதத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கும் எமது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது.

இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’. இவ்வாறு நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபையின் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்ற ஒரே மாதிரியான கலாசார வழிபாட்டு முறைகளைக் கொண்ட பௌத்த, இந்து சமய உற்சவங்களின் போது இத்தகைய முரண்பாடு தோன்றியிருப்பது அமைதியை விரும்புகின்ற பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் முழு நாட்டிற்குமே இது பாரிய பாதிப்புக்கு வழி கோலுவதாக அமையும்.

இவ்வாறு ஒரு மதம் சார்ந்த திருவிழாக்களைத் தடைசெய்து இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் காணப்படும் பரஸ்பர நல்லிணக்கத்திற்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியது.

ஒரு தேசிய பிரச்சினையாகவும் மாறிவிடலாம். இது தொடர்பாக ஜனாதிபதி கலாசார அமைச்சர் தேசிய நல்லிணக்க அமைச்சரும் மதத்தலைவர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் இறக்குவானை நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோர் கலந்துரையாடி ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆலயத்தின் உற்சவத்தினை எந்தவித தடையுமின்றி நடத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *