உள்ளூராட்சி மன்றங்கள் நடப்பு வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் நிலையான வைப்பில் இடப்பட்டிருக்கும் நிதியினை மூலதன அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரத்தை உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து பெற வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். தயாபரன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
உள்ளூராட்சி மன்றங்கள் முன்னைய வருடங்களின் நிலையான வைப்புக் கணக்கிலிருந்து பெற்று நடப்பு வருட அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற சட்ட விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினத் தலைப்பிற்கு மேலதிகமாக செலவு செய்வதாயின் வாக்குப் பணவகை மாற்றத் தின் மூலமே மேற்கொள்ள முடியும். கணக்காய்வு அத்தியட்சகரினால் ஏற்றுக் கொள்ளப்படாத கொடுப்பனவுக்குரிய தொகை அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் முதல்வர்கள், தலைவர்கள் மற்றும் அக் கொடுப்பனவுக்கான தீர்மானத்தை அங்கீகரித்த சபை அங்கத்தவர்கள் ஆகியோரிடமிருந்து அறவிடப்பட வேண்டிவரும்.