பேராசிரியர் துஷ்யந்தி ஹூல்,
அதிபர், போல்டயஸ் இறையியல் கல்லூரி,
திருகோணமலை
யாழ்ப்பாணத்தாரின் அடையாளம்:
யாழ்ப்பாணத்தாரின் அடையாளம் எது என்று கேட்டால் அவர்கள் சைவம் அல்லது சிவபூமி என்கின்றனர். சிங்களவரோ மொழியைச் சுட்டிக்காட்டி ‘தெமிழ’ என்கின்றனர். யாழப்பாணப் பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகளும் ஆரியரின் இந்து சமயத்தை மட்டுமே பிரதிபலிக்கின்றன. அப்படியானால் யாழ்ப்பாணத்துத் தமிழரின் சமயம் எங்கே?
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று அறிவுரை எழுதினார் ஒரு கவிஞர். அதாவது ஒரு மக்களினம் உலகில் நிலைத்திருப்பதற்கு அம்மக்கள் முதலில் தம் உண்மையான அடையாளத்தையும், தாம் யாரென்பதையும் ஆராயந்து, அறுதியாய் அறிந்திருப்பது முக்கியம். யாழ்ப்பாணத்தார் மொழியிலும் தமிழ், இரத்தத்திலும் தமிழாய் இருந்தும்; தம்மை சுத்த வைதீகசைவர் அதாவது ஆரியசமயிகளாக அடையாளப் படுத்துவது எதனால்? எதனால் என்றால் இங்கு வைதீக சைவசமயம் நாவலரால் நிலைநாட்டப் பட்டதாலாகும். அதன் காரணத்தினாலே தான் தமிழரின் சமயத்தின் தடங்களை இப்போது யாழப்பாணத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. அதனால் யாழப்பாணத்தில் திராவிடம் ஒழிந்து விட்டதா அல்லது மறுக்கப் படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
எமது உண்மையை அறிவது எமது இனத்தைத் தக்க வைக்கும். நாம் பெறும் சமூகக் கல்வி, வரலாறு மற்றும் சமயம் என்ற பாடங்கள் துக்ககரமாக அதிகாரத்தில் இருப்பவர்களின் இலக்குகளை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே எழுதப்படுகின்றன. இதனால் கல்வி அதிகம் அரசியல் மயமாக்கப் பட்டுள்ளது. அது தமிழரின் சிந்தனை மரபை அமுக்கி விடுகிறது. எம்மைப் பற்றி விளிப்பாயிராததால் எம் இருப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. எனவே எம் அடையாளம் என்ன என்பதை மொத்த தமிழ்ச் சமுதாயமும் விளங்கிக் கொள்வது அவசியம். ஒரு கலாச்சாரம் அதன் சமயத்தால் வடிவமைக்கப் படுவதால் இங்கு தமிழரின் சமயத்தை ஆராய்வோம்.
யாழ்ப்பாணத்தாரின் மதம் சைவம். சைவம் ஒரு வைதீக மதம். அதாவது அது ஆரியரின் இந்து வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. நாவலர் தீகசைவத்தை நிறுவுவதற்கு தமிழரின் பாரம்பரிய வழிபாடுகளை இங்கு அகற்றினார். அதற்காய் அவரை ஒரு சமயகுரவர் ஸ்தானத்தில் தமிழ் மக்கள் வைத்துப் போற்றுகின்றனர். ஆனால் அவர் நிலைநாட்டி வைத்துள்ள இந்து வேதங்களும், சமஸ்கிருதமும் தமிழுக்குரியவையல்ல. தமிழரின் சிந்தனையும் மாறானது என எமது இலக்கியங்கள் காட்டுகின்றன.
வேல் ஆரியரின் ஸ்கந்தனுக்குரிய போராயுதமல்ல:
யாழ்ப்பாணத்து அரசு முடிந்து இருநூறு வருடங்களான பின்பும், பதினெட்டாம் நூற்றாண்டில் யாழப்ப்பாணத்தின் அடையாளம் சங்கிலித்தோப்பில் வெட்ட வெளியில் ஊன்றியிருந்த தமிழரின் மரபுச் சின்னமான வேலாகும். அந்த வேல் ஆரியரின் ஸ்கந்தனுக்குரிய போராயுதமல்ல. ஆதி விவசாய சமுதாயங்களில் மண்ணை வளப்படுத்தும் குடைவான வேல் வடிவக் கருவி தான் தாய்த் தெய்வத்தின் சின்னமாயிருந்தது. அரசன் தாய்த்தெய்வத்தின் ஆற்றலைப் பெற்று எமது காவலனும், வேலன் எனப்படுகிற தமிழ் பூசாரியும் ஆயிருப்பான் என்பதே எமது தமிழ் மரபு. இன்று யாழ்ப்பாண அரசரின் வேல் தன் தமிழ் அடையாளத்தை இழந்து, ஆரியரின் போர்க் கருவியாய் காட்டப்படுகின்றது. மேலுமது பிராமணருக்குக் கைமாறி பலரும் அறியாது நல்லூர் கந்தஸ்வாமி தேவஸ்தானத்தில் ஒரு சூஃபி மேட்டின் மேல் மறைந்து நிற்கின்றது. அக்கோயிலில் தமிழ் கந்தபுராணம் கூட பிராமணராலேயே பாராயணம் செய்யப்பட வேண்டும் என்று ஆறுமுக நாவலர் விதித்தார். இவ்வாறு நல்லூர் முற்றிலும் ஒரு ஆரியரின் ஸ்தலமாக்கப் பட்டுள்ளது.
இதனால் எம் தமிழ் அடையாளத்தை சமஸ்கிருதத்துக்கு இழந்து நிற்கிறோம். இதன் அபாயம் என்னவெனில், இச்சிந்தனையால் தமிழர் மத்தியில் வைதீகம் ஓங்க, தெலுங்கும், கன்னடமும், சிங்களமும் சென்ற வழியில் தமிழும் ஒரு விளங்காத ஆரியமொழியாக்கப்படும். தமிழில் பற்றும், மரியாதையும், ஆவலும் தணிந்து போய்விடும். உலகம் காலநிலை மாற்றத்தால் தவிக்கும், இக்காலத்தில் ஆரியரின் போர்மரபல்ல, திராவிடரின் விவசாய சமயமே மக்களை உயிர்ப்பிக்கும். ஆன்மீகத்தை ஆதரிக்கும்.
யாழ்ப்பாணத்தின் அடையாளம் சைவம் என்று கூறுவது இங்கு திராவிடத்தின் ஒழிப்பாகிறது:
இன்று எங்கள் சங்கிலியரசனே வந்தாலும் அன்றுபோல் அதன் வேலைப் பற்றிப் பிடித்து அத்தேவஸ்தானத்துக்குள் நுழைந்து பூசை செய்ய முடியாது. ஏனெனில் அவன் திராவிடன். அரசர் உட்பட திராவிடர் சூத்திர சாதி என்று பிராமணர் வேதம் எழுதியுள்ளனர். சூத்திரர் கோயிலுக்குள் புகுவதை தடை செய்தனர். இருக்கு வேதத்தின் கடைசிப் பகுதிகளில் சாதிப்படி பிராமணன் தன்னைத்தானே அரசனிலும் மேல் வகுக்கிறான். இந்து வேதத்தை மீறினால் பிராமணரல்லாதாருக்கு மட்டுமே தண்டனைகளையும் சாபங்களையும் வேதங்களில் எழுதினான். இந்த பாகுபாட்டை நியாயப்படுத்த பிராமணர் மட்டுமே பலியிடலாம். பிராமணரே வருடாவருடம் யாகம் செய்து மோட்சத்திற்கு அரசனின் ஆன்மாவை அனுப்பி, அதை அங்கு நித்தியமாய்த் தக்க வைக்கலாம். ஆனால் பூசை செய்பவன் அரசனே ஆனாலும் அவன் பிராமணனில்லாவிடில் சாமி கேட்காது என்றுள்ளது. அதனால் அரசன் சாதியில் பிராமணனிலும் தாழ்ந்தவன் என்று வேதங்களில் எழுதினர்.
இதனாலேயே வெற்றியையும், மோடசத்தையும் கேட்டு அரசன் தமிழரின் ஆதி வழிபாட்டுத் தலங்களான வேங்கை, அரசு, ஆல் ஆகிய மரங்களாலான தோப்புகளிலும் வனங்களிலும் ஆரியசாமிகளுக்குக் கற்கோயில்கள் கட்டி தன் பூசாரி வேலையையும் பிராமணரிடம் கையளித்தான். இவற்றின் கருத்து என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் அரசவலு இப்பொழுது அதன் தமிழ்த் திராவிட மக்களில் இல்லை, அது பிராமணரின் கைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அதனால் தான் சங்கிலி அரசனுக்கே தன் நல்லூரிலேயே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இலங்கைப் பிராமணர் சாதிச்சட்டகத்துக்கு கீழே விழுந்துள்ளனர். ஏனெனில் கடல்கடந்து வந்தால் பிராமணன் சாதியை இழந்து ஆசங்கா ஆவான் என்பது வேதபிரமாணம். இங்கே சைவர் மட்டுமல்ல பிராமணர் எனப்படுபவர்களும் அவ்விதியைக் காணாதமாதிரி நடக்கின்றனர். அதை மதித்தால் யாழ்ப்பாணத்தின் வைதீகம் வெறும் பொய்யாகிவிடும். ஆவர்கள் நடத்தும் பூஜைகள் பலிக்கா. சாதி ஒரு அடிப்படை இந்து தர்மமாகும். அதை சூத்திரர் கேட்கக்கூடிய வேதமாகிய மகாபாரதத்தில் பகவத்கீதையில் கிருஷ்ணர் போதிக்கிறார். இந்து வர்ணகோட்பாட்டின் அடிப்படையானது ஒருவரிலுள்ள ஆரிய கலப்பு வீதம் என இன்று உயிரணு ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன. இதன்படியே மக்கள் சாதி வகுக்கப் பட்டிருக்கின்றனர். ஆரியரில்லாதாரை, அதாவது இந்தியாவின் ஆதிமக்களே திராவிடர். இவற்றையெல்லாம் சைவர் ஓம்பி நடக்கின்றனர். ஆனால் அறிவு யுகமாகிய இன்று தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு ஐயமற்ற ஆராய்ச்சிகளால் வெளிவருகிறது.
நல்லூரை சைவம் ஆக்கியதாலேயே யாழ்ப்பாண அரசின் சங்கிலித்தோப்பும், கந்தரோடை சங்குவெளியும் தமிழரின் சமயத்தினதும் இறைமையினதும் அடையாளங்களை இழந்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்தார் கூட இத்தலங்களை வேற்றுக் கலாச்சாரம் போல் மறந்து விட்டது ஏன்? இளைப்பாறிய பேராசிரியர்களான குறிப்பாக புஷ்பரத்தினம் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அறிவுத்தள கட்டுரைகள் மட்டுமே எம் திராவிட பூர்வீகத்துக்கு ஓரளவு சான்றாகின்றன. இதனாலேயே யாழ்ப்பாணத்தின் அடையாளம் சைவம் என்று கூறுவது இங்கு திராவிடத்தின் ஒழிப்பாகிறது எனலாம்.
தமிழரின் தெய்வங்கள் யார்?
அப்படியானால், தமிழரின் தெய்வங்கள் யார்? நல்லூர் கந்தஸ்வாமி யார்? சிவன் யார்? இவர்களின் மனைவிமார் யார்? இவர்களிலெல்லாம் யார் பழமையானவர்? வருஷம் தோறும் பிராமணர் தம் சாமிகளுக்குக் கலியாணம் வைப்பதேன்? இவற்றை இன்றைய விஞ்ஞானம், வரலாறு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சிகளை வைத்து முறையே நோக்குவோம்.
திராவிடர் யார்? ஆரியரில்லாத மக்களை ஆரியரிஷிகள் திராவிடர் என்றனர். தமிழகத்தில் திராவிடர் 70,000 ஆண்டுகளாய் வாழ்ந்துவருவதாக மரபணு (DNA உயிரணுவின் ஒரு குணாதிசயத்துக்குரிய குறியீட்டு எச்சம்) ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். உயிரணு ஆராய்ச்சிகள் ஒருவரின் இனங்களைக் காட்டும். தமிழரில் ஆபிரிக்க மரபுணுவும் தமிழகத்திற்கு மட்டுமே உரிய ஒரு மரபணுவும் உள்ளன. இந்த தமிழகத்துக்கு மட்டும் உரிய விசேட மரபணு 28,000 வருஷம் பழைமையானது. அக்காலத்தில் இலங்கை தீவாய்ப் பிரியாது தமிழக மண்ணாயிருந்ததது. மேலும் தமிழ் நாட்டின் இருளர், தோடர், குரும்பர் போன்ற ஆதிவாசிகளில் சிந்து சமவெளி மக்களின் மரபணு உள்ளதென்று நிறுவியுள்ளனர். தொல்லியலாளர், திராவிடக் கலாச்சாரம் தமிழகம், சிந்துசமவெளி எங்கும் ஒன்றிலொன்று ஊடுருவி இருந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன என்கிறார்கள்.
தமிழரும் சிங்களவரும் ஒரே மக்கள்:
மேலும் இலங்கைத் தமிழரும் சிங்களவரும் அறுபது வீதத்துக்கும்மேல், அதே மக்கள் என்றும், சிங்களவரில் தமிழரிலும் கூடவாய் இந்தியத் தமிழ் மரபணு உண்டென்றும் காட்டப்பட்டுள்ளது. அதாவது இலங்கையிலும் ஆரிய இனக்கலப்பு அரிது. இலங்கையில் பல இடங்களிலும் கிடைத்துள்ள புராதன கல்வெட்டுகளும் தமிழி அதாவது தமிழ் பிராமி வரிவடிவத்திலேயே காணப்படுகின்றன. அவை சிங்கள கல்வெட்டுகளுக்கு முந்தியவை எனப்படுகின்றன. அதைவிட தமிழ்நாட்டின் மரபணு ஒன்று பத்தாயிரம் வருடங்களின் முன்பு சுமெரியா ஊரொன்றிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தமிழக மக்கள் அங்கு ஆதியிலேயே சென்று குடியிருந்ததற்கு ஆதாரமாகிறது. அதனாலேயே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பழந்தமிழன் சொன்னான்.
வட இந்தியாவில் சிற்சில இடங்கள் தவிர, மக்கள் இப்போ ஆரியமொழியைப் பேசுவதால் மரபணு ஆய்வுகள் வருமுன், இந்தியாவின் பழமையான மக்கள் திராவிடரே என்ற உண்மை தெரியாதிருந்தது. வடஇந்தியாவிலும் கூட ஆரியர் மரபணு மிகவும் பிந்தி, அதாவது 3500 வருடங்கள் முனபு தான் உள்வந்திருக்கிறது. அங்கிருந்து அது தமிழகத்திற்கு வர 2500 வருட காலமெடுத்தது. தமிழரில் இன்னமும் பிராமணர் குறைவாய் மூன்று வீதம் போலுள்ளனர். பிராமணரும் தமிழகத்து அந்தணரும் வெவ்வேறு மக்கள். அந்தணரில் ஐயர், ஐயங்காரர் என்ற மரபுகள் உண்டு. அவர்களில் குறைவாகவே ஆரிய மரபணு காணப்படுகிறது. இதனால் சாதிமதிப்பீட்டில் தமிழகத்தின் அந்தணர் குலம் பிராமணரிலும் குறைந்தவர் என்கின்றனர்.
ஆரியர் யார்?
ஆரியர் யார்? ஆரியரின் பூர்வீக தேசம் ரஷ்யா என மரபணு ஆராய்ச்சியாளர் காட்டுகின்றனர். பிராமணர் தம்மை வெள்ளையென்பது அதனாலாகும். அவர்கள் கால்நடை மேய்ப்பரும், வேட்டையாடுபவராயும் இருந்தனர். அங்கிருந்து யூரல் நதி, அமுதாயா, யமுனையா ஆகிய நதி தீரங்களிலும் தங்கினர். பின் அவர்களில் ஒருகிளை ஈரானுக்குள்ளும் மறுகிளை கி. மு. 1500 வருடகாலம் தொட்டு இமயமலைப் பகுதியினூடாய் பகவத்கீதை அட்டையில் காண்கின்ற மாதிரி தேரும் குதிரையுமாய் அலை அலையாய் ஆயுதத்தோடு வந்தார்கள். அவர்களின் போர்முறை தமிழரின் முறைக்கு மாறாயிருந்தது.
கிராமங்களுக்குள் சடுதியாய் புகுந்து ஓடும் குதிரைகளின் மேல் நின்றபடியே அம்பு, வேல் என்பவற்றை தூர எய்வார்கள். கலைத்துச் சென்றவரை மறைந்திருந்து வளைத்துக் கொன்று தலைகளை மலைகளாய்க் குவித்தனர். திராவிடரைக் கொன்றனர். அவ்வேளை இந்தியாவில் திராவிடர் விவசாயமும், நகரக் கலாச்சாரமும் தமக்குள் போரிட்டு வாழ்ந்திருந்தனர். ஆரிய ஆண்கள் மட்டுமே இந்தியாவுக்குள் வந்தனர். பெண்களைக் கவர்ந்து போய் மனைவியராக்குவது அவர்களின் ஒரு மத்திய ஆசியா வழக்கமாயிருந்தது. அதனாலேயே இந்தியரின் ஆரியமரபணு பெண்களில் இல்லை, ஆண்களிலேயே காணப்படுகிறது.
இந்தியாவின் நாலாயிரமாண்டுகள் முன்னான சிந்துசமவெளிப் பிரதேசத்திலிருக்கும் கிகிரி கிராமத்தில் கிடைத்த தொல்லியல் மனித எலும்புக் கூடுகள் பரிசோதிக்கப் பட்டபோது அக்கட்டத்திலும் கூட ஆரியர் இந்தியாவிற்கு வந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. குப்தர் காலத்திலும் பிராமணர் வடஇந்தியாவில் சிறுகுழுக்களாகவே வாழ்ந்துவந்தாலும், தமிழகத்தில் தேவார காலத்தில் தான் அவர்கள் தம்மை ஒரு கட்டமைப்பின் கீழ் அமைத்தனர். அரசர்களுக்குக் குருவாக வைக்கப்பட்டதால் அரசனினூடு தமிழகத்தின் சமயத்தில் பெரும் ஆதிக்கத்தைப் பெற்றனர். பிராமணரின் சாமிகள் ஆண்களாவார்.
ஆதிமனிதர் இயற்கையை நடத்தும் ஏதவை தெய்வமாக எண்ணினான். அதை வணங்குமிடங்களில் அடையாளங்கள் வைத்தான். பின்பு விவசாயிகளானபோது, ஆதிபெண் தெய்வமும் திராவிடரால் வணங்கப் பட்டாள். இதை வரலாற்றுக்கு முன்னான ஓவியங்கள், சிலைகளில் காணலாம். தமிழ்நாட்டின் எந்த தொல்லியல் அகழ்வுகளிலும் வேதீகக் கடவுள்களான இந்திரனோ, ருத்திரனோ, பின்வந்த எந்த ஆண் தெய்வங்களோ கிடைக்கவில்லை. இதுவும் ஆரியர் தமிழகத்துக்குள் மிகவும் பிந்தியே வந்துள்ளனர் என்பது நிச்சயம்.
ஆறுமுகநாவலர்:
ஆதனால் தான் இந்திய உபகண்டத்தின் கடைசித் தமிழ் எல்லைக்கு ஆரியரின் சமயத்தைக் கொண்டு வந்து நிலைநாட்டினார் என்று ‘ல‘ ஆறுமுகநாவலர் எல்லா மேடைகளிலும் சமயகுரவராய் வணக்கம் பெறுகிறார். அவர் தமிழரின் பாரம்பரிய சாமிகளை யாழ்ப்பாணத்திலிருந்து நீக்கினார்.
பிராமணரை அத்தலங்களில் ஆரியசாமிகளை அமைத்துப் பூஜிக்கவைத்தார். இவற்றால் சைவத்தோடு சாதித்யமும் யாழ்ப்பாணத்தில் இறுகியது. அவரையும் மக்கள் பிராமணர் என்றே அழைத்தனர்.
இன்று கிறிஸ்தவ கல்லூரிகளிற் கூட தமிழர் கலை விழா என்பதே ஆரியதேவி வாணிக்கு விழாவாகி பிள்ளைப் பருவத்திலேயே தமிழ் என்று கூறி சைவ மதத்தைக் கொண்டாட வைக்கின்றனர். பிறமத தமிழ்ப் பிள்ளைகளின் சமய உரிமை மறுக்கப் படுகிறது. தமிழ் மொழியும் கலாச்சாரமும் சைவசமயத்தின் காவியாக மட்டும் பாவிக்கப்படுகிறதே ஒழிய தமிழினதோ திராவிடரினதோ பெருமையை போற்றுவதற்கல்ல. இவ்வாறு சங்கத் தமிழின் மிக உயர்வான பெருஞ் சிந்தனைகள் தமிழரிடமிருந்து மறைக்கப்படுகின்றன.
இந்தியாவின் ஆதிக் குடிகள் திராவிடர்:
இந்து என்பது சிந்துநதிக்கு இப்பக்கமுள்ளவற்றைக் குறிக்க காலனித்துவ காலத்தில் எழுந்த சொல். இன்றைய அகராதிகள் அதை ஆரியரின் மதமாக காட்டுகின்றன. இந்துக்களின் பெருங்கடவுள்மார் இப்போ விஷ்ணுவும், சிவனும் ஆவர். சிவன் வைதீக சாமி என்றும் தென்னாடுடைய தமிழ்க் கடவுள் என்றும் வணங்கப்படுகிறார். ஆனால், இந்துவேதங்களிலோ கிளைச்சமயமான ஈரானின் அவெஸ்தா வேதசாஸ்திரங்களிலோ சிவன் என்ற நாமத்தில் ஒரு சிறுதெய்வமோ, கணமோ, பேயோ கூட கூறப்பட்டில்லை. அதில் சிவ் என்பது ஒரு பொதுவான பெயரடைச் சொல்லாய் பாவிக்கப்பட்டது. ஆனால் ஆரியரின் இந்து வேதங்களின் முழுமுதற்சாமி தேரும், ஆயதமும் கொண்ட இந்திரா ஆவார். ஏனெனில் வேதங்கள் எழுதப்படும்பொழுது அதாவது கி. மு 1500 காலவளவில் ஆரியரின் நாடோடி வாழ்க்கையில் மேய்ச்சல், வேட்டை, போர், வனவாசம் முக்கியமாய் இருந்தது. இந்திரா ஆயிரங்கண்களை உடையவர். அதாவது ஆயிரம் வல்லமைகளைக் கொண்டவர் என்பது சுத்திகரிக்கப்பட்ட விளக்கம்.
ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்தபோது திராவிடர் கொண்டிருந்த சகலத்தையும் வஞ்சித்தனர். விவசாய சேமிப்பு, நீர் ஆழுமை, நகரக் கலாச்சாரத்தில் திராவிடர் விண்ணராயிருந்தனர். ஆனால் வழிபாடுகள், அரசர், மக்களின் நிறம், உணவு, உழைப்பு சகலமும் மிகவும் வித்தியாசமாயிருந்தது. ரிஷிகள் தம்மினத்தை ஆரியரென்றும் இந்தியரைத் திராவிடர் என்றும் அழைத்தனர். இங்கு உண்ணவும் பலிகொடுக்கவும் வேட்டை, போர் என்று அலைவது தேவைப்படவில்லை. அதனால் யாகம் செய்வது இந்திராவுக்குக் காளைப் பலியிடுவதிலும் உயர்வானது என்று தம் வேதத்தை மாற்றினர். யாகத்திற்கு திராவிட அரசர்களிடம் மனிதர், மிருகங்கள், தானியம், நன்னீர் என சகல பலிப்பொருட்களையும் தானமாயப் பெற்றனர். திராவிடரை ஏவலாளிகளாய் (அவர்மொழியில் சூத்திரராக) பணிய வைத்தனர். திராவிடர் வயல் மண்ணில் உழைப்பதால் அசுத்தமானவர் என்று விலக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் பசுக்களைத் தானம் பெற்று நெய் உண்டாக்கிர். அதனாலேயே அக்கினி முதன்மைத் தெய்வமாகியது.
இந்திரா இறந்தார். இந்திராவின் பெயரை அடுத்தடுத்த சாமிகளோடு இணைத்து, இந்திரா-அக்னி, அக்னி-ருத்ரா, பின் ருத்ர-ஷிவா என்ற தெய்வங்கள் காலத்திற்கேற்றபடி முக்கியமாகின. கடைசியில் தேவாரகாலத்தில் எழுதப்பட்ட புராணங்களில் தான் ஷிவ என்ற பெயர் ஒரு அடைச்சொல்லாயல்லாமல் முதன்முறையாக ஒரு சிறு தெய்வத்தைக் குறித்தது. ஆனால் அதில் முரண்பாடிருந்தது. இந்துவேதமரபில் முழுமுதற் கடவுளுக்கு ஆயிரம் கண்கள் என்ற கோட்பாடு உண்டு. அது சிவனுக்குப் பொருந்தவில்லை.
வரலாற்றில், முதலில் சுவன் அல்லது சிவன் என்ற தெய்வம் நாலாயிரம் வருடங்கள் முன்னிருந்த சுமெரியாவின் தெய்வமாகுவார் (இன்றைய ஈராக்). சுமெரியத்தில் அவர் நாமம் ஸ்வ்ன் என்று மெய்யெழுத்தில்லாமல் எழுதப்பட்டது. பழைய அரமெய்க்கு, எபிரேயம், தொல்காப்பியம் முன்னான தமிழிலும் மெய்யெழுத்தின்றி எழுதப்பட்டது (ராசரத்தினம் சு). இதனால் சுவப்பு என்றும் சிவப்பு என்றும் ஒன்றையே உச்சரிப்பது போல் ஸ்வ்ன் என்ற பெயரும் சுவன் என்றும் சிவனென்றும் உச்சரிக்கக்கூடியது. சிவன் தெய்வமாக தேவார காலத்தில் தான் தமிழுக்குள் முக்கியமாகினார்.
சுவன் – சிவன்:
ஆனால் சுவன் மற்றும் சிவன் என்ற என்ற சாமி முதன்முதலில் இந்தியாவில் (கி. பி 240 அளவில்) கூறப்பட்டுள்ளது மாணிக்கியம் என்ற சமயத்தில் ஆகும். அதன் ஸ்தாபகர் மணி (கி. பி. 216- 277) மெசப்பதேமியா நாட்டினர். தம் சுவன் என்ற சுமெரிய முழுமுதற் கடவுளின் பெயரை மாணிக்கிய சமயத்திலும் பாவித்தார். குரு மணி தொடக்கத்தில் ஒரு நொஸ்திய-கிறிஸ்தவ குருகுலத்தில் வளர்ந்தார். பின் ஈரான், காஷ்மீர், இந்தியா, திபெத்து என்று சீனாவரை நாட்டிற்கு ஏற்றபடி தனது மாணிக்கிய சமயத்தைப் போதித்து பல மடங்களை அமைத்தார். தமிழகத்தில் காஞ்சிபுரம், காலடி போன்ற இடங்களில் தன் மத்திய மாணிக்கிய ஆதீனங்களை நிறுவினார். பிற்காலத்தில் தன்னை சுவனின் ஆவியுடைய அவதாரமென்று உயர்த்தினதால் கிறிஸ்தவ திருச்சபையால் நீக்கப்பட்டார். அவர் சுவனுக்கும், இயேசுவுக்கும், தாய்க்கும் உருக்கமான பக்திப் பாடல்களை இசையோடு எழுதிப் பாடியதுமட்டுமல்ல, தம் கோட்பாடுகளையும், தர்க்க முறைகளையும் சித்தரிப்புகளையும் மாணிக்கிய வாசகங்களிலும், வழிபாடு ஓதலிலும் உலக சமயமாகக் கற்பித்துள்ளார். தன் சமயத்தைக் கற்பிப்பதற்கு மாணிக்கியவாசகர்கள், ஓதுவார் என்ற துறவிகளை மணி உருவாக்கினார். ஆனால் கடவுளுக்கு உருவம் கொடுத்து விக்ரகம் வைப்பது அவரின் கிறிஸ்தவ மார்க்கத்திற்குத் தடையாயிருந்தது.
மாணிக்கிய சமயத்தின் சின்னங்கள் வேலும், மயிலுமாகும். அவர் சுப்ரமணி என்றழைக்கப்பட்டார். இயேசுவின் மொழியான அரமெய்க்கில், சுப்ர என்பது புனித ஒளிர்வு என்ற கருத்துடையது. அது முக்திக்கும், மீண்டும் பிறந்தவருக்குமான ஆன்மீக ஒளியாகும். சுப்ரமணி பௌத்த, சமண மதங்களுக்குரிய பல இந்தியமதக் கலைச்சொற்களையும் பௌத்த சங்கத்தின் கட்டமைப்பை உள்வாங்கியதாலும் மாணிக்கியம், தேவாரகாலத்தில் பௌத்த நாத்திக மரபாக வகுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
கல்வியறிவுடைய செல்வந்தர் மற்றும் வெள்ளாளரிடையில் இம்மதம் பெரும் ஆதரவு பெற்றிருந்தது. மணியின் ஓவியங்களில் அவர் துவியாகவும் வெள்ளை உடையோடும், அழகான சிறியமனிதராகவும், பாரசீகரின் வெள்ளை நிறமாகவும் காட்டப்படுவார். நல்லூர் கந்தனும் குப்த அரசரும் மற்றும் சுப்பிரமணியரும் மாணிக்கிய சுப்பிரமணித் துறவியும் தோற்றத்தில் ஒத்தவர்கள். இன்றும் நெற்றியில் சாம்பலும், மஞ்சள், சிவப்புப் பொடிகள், காவி, சடைமுடி, செபமாலை, தண்டம் என்பன பாஹிடாவி எனப்படும் எதியோப்பிய யூததுறவிகளின் சின்னமுமாகும். ஆனால் சுமெரியர் மற்றும் தமிழரின் விக்கிரகங்கள், கறுப்பு நிறத்தின. மாணிக்கியமும், பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் இயேசுவழி போன்று, நாயன்மார்களால் ஒரு நாத்திக அதாவது இந்து வேதங்களை ஏற்காத சமயமாக வகுக்கப்பட்டு இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. சுவன் தனித்திருப்பவராய் சகலத்தையும் நடத்துகிறார். ஆனால் இந்து சாமிகள் பிராமணரின் உச்சரிப்புகளால் இறவாதுள்ளனர். எனினும நாத்திகரின் பற்பல கற்பினைகள் சைவத்துள் உள்வாங்கப் பட்டுள்ளது ஆராயப் படவேண்டிய விடயம். ஆதிதமிழருக்கு மெசப்பத்தேமியாவுடன் தொன்று தொட்டு உறவு இருந்ததால் ஈருவரிடையில் சிந்தனைப்பரிவு இருந்தது. எனவே சிவன் என்ற நாமம் மாணிக்கியத்துக்கூடாகத் தமிழில் வந்தது எனலாம். அன்பே சுவன் என்பது மாணிக்கியவடிவ கிறிஸ்தவ வரைவிலக்கணமாகும்.
மேலும் தமிழரின் சங்ககால இலக்கியத்தில் கூட சிவன் என்ற நாமமில்லை. அப்படியிருக்க அங்குள்ள முக்கண்ணன் என்பவரும், சிந்துசமவெளி முத்திரையில் மிருகங்களுடன் உள்ளவரும் சிவன் என்றும் சைவர் கூறுகின்றனர். ஆனால், முக்கண்ணன் என்ற பதம் தெய்வீகஞானத்தைக் குறிக்கும் ஓரு பொதுப் பெயராகும். அது கௌதம புத்தருக்கும், திராவிடரின் ஆதித் தாய்த்தெய்வத்துக்கும், அவர் மகனுக்கும், மற்றும் சுமெரியர, பாபிலோனியரின் சுவன், என்று பலதெய்வங்களுக்குப் பாவிக்கப் பட்டது.
சமஸ்கிருதத்திலில்லாமல் தமிழில் உள்ளதால் முக்கண்ணன் வைதீகமல்ல தமிழகத்து சாமியாவார். மேலும் நான்கு வேதங்களிலும் சிவன் குறிப்பிடப்படவில்லை. சிந்துநதி நாகரிகத்தின் போது அங்கு ஆரியர் குடியேற்றமில்லை. வேதங்களே எழுதப்படவில்லை. பின் எப்படி அங்கு சிவன் முத்திரையை உருவாக்கினார்கள்? பசுபதி பாணியில் பல ஆண், பெண் உருவங்கள் கி மு 4000 தொட்டு மெசப்பத்தேமியா மற்றும் பலநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை வேட்டை, வளர்ப்பாக்கல், மிருகபாஷை பற்றியுமிருக்கலாம் எனப்படுகிறது.
மத்திய ஆசியப் பிரதேசத்திலும் சிவனில்லை. அவர்களின் ஈஷோ, மகாதேவ் யாவரையும் சிவனென்கிறார்கள். பார்வதி என்பதன் மூலமும் சைவமல்ல. அது அவெஸ்தாசமய தெய்வத்தின் சமஸ்கிருதத் திரிபு. இரு மொழிகளும் அதே மொழியின் திரிபுகள். ஈரானியரின் மலையின் தாய் அணங்கு ஹர தவ. பரதேவி, பார்வதி, சரஸ் வதி என்பன அப்பெயரின் சமஸ்கிருத மாற்று உச்சரிப்புகள். தென்னாடுடைய சிவன் வடக்கிலுள்ள கைலாயவாசியாவார். பல நாடுகளினதும் சாமிகளை ஒன்றிணைத்து தம் வேதங்களிலுள்ள சாமிபெயர்களோடு இணைத்தனர். கல்வியும் சமயமும் பிராமணரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று ஆயிரமாண்டுகளாய் அவர்களால் மாற்றப்பட்டுள்ளன. இன்று கோயில்கள் அதேமாதிரி கட்டப்படுவதால் தலத்தின் தமிழ் பூர்வீகம் மறைக்கப் படுகிறது.
மேலும் தமிழருக்கு தமிழைத் தந்தவர் சிவனா, அகஸ்தியரிஷியா என்பது ஆராயப் படவேண்டியது. ஏனெனில், இருக்கு வேதப்படி திராவிடர் மொழியில்லாதவர்கள். தமிழ் அவர்களின் நீசர் தரத்துக்கேற்றபடி ரிஷிகள் உருவாக்கிக் கொடுத்த மொழி என்று வேதங்கள் கூறுகின்றன. தமிழுக்கு இலக்கணத்தை எழுதி பின் மொழியை உருவாக்கினாரென்றும் பாலர்களுக்கே கற்பிக்கப்படுகிறது. அறிவுக்கு முரணானது. அதனாலேயே சைவவழிபாட்டில் தமிழ் விலக்கானது. அத்தோடு நாவலர் நல்லுரில் கந்தபுராணத்துக்குப் பாராயணம் கூட பிராமணர் மட்டுமே செய்யலாம் என்று விதித்தார். திராவிட பங்களிப்பு தீட்டாயிற்று.
தமிழரின் சமயம்:
தமிழுக்குள் சமஸ்கிருத பாவனையைக் கொண்டு வந்தவர்கள், திருமூலர் போன்ற சைவ குரவர்கள ஆவார்கள். திருமந்திரம் எழுதிய திருமூலர் வடநாட்டவர், தமிழரல்ல. தமிழ் செம்மொழி. சமஸ்கிருதத்துக்கு முன்னானது. சைவம் என்றால் தமிழ் என்றால் ஏன் சமஸ்கிருதப் பாவிப்பு அவசியமாகிறது? தம் மொழிக்கு இயல்பாய் வராத உச்சரிப்புக்கே பிறமொழி எழுத்துக்கள் தேவை. கலப்படம் கல்வித்தகைமைக்கும், உயர் சாதிக்கும் அடையாளமாகப் போற்றினர். அரசர் தமிழராயிராததால் இதை விரும்பினர்.
தெலுங்கு, கன்னடம், துலு, மலையாளம் யாவும் ஆரிய மொழிகளாக்கப் பட்டதன் காரணமஎழுதும் பொழுது அதிக சமஸ்கிருதம் பழந்தமிழில் திணிக்கப் பட்டதாலாகும். வேதங்கள் தமிழை நீச பாஷை, சூத்திரபாஷை என்று இழிவுபடுத்தின. இன்றுவரை அது நம்பப்படுவதால், தமிழ்க் கல்விமான்கள் கூட தமிழைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அநேக அரிய தமிழ் ஏடுகளும், வரலாற்றுச் சின்னங்களும் அழிந்தது பற்றி காலனித்துவ காலத்தில் தான் ஆங்கிலேயரால் விளிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
அதனால் வைதீகம் என்பது தமிழரின் சமயம் என்பதை ஏற்க முடியாது. எனவே தமிழ் என்றால் சைவம், சைவம் என்றால் தமிழ் என்று பேசுவது தமிழை ஆரியத்துக்கு அடிமையாக்கும் சற்சூத்திரரின் கூற்றாகும். அது தமிழரின் தெய்வங்களையும் மொழியின் தமிழகத்து பிறப்பையும் மறுக்கிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முன்னான சான்றுகள் பெண்வழிபாட்டையே காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் இயற்கை வனப்பை விட தமிழரின் தெய்வங்கள் கி. பி 300 வரை இமயத்திலல்ல தமிழகத்து திணைகள் படி அமைந்தன. காடு, மேய்ச்சல் நிலத்துக்கு மாய், வயலுக்கு வேந்தன், கடல் பக்கம் நெடி, பாலைக்கு கொற்றவை என்பன முக்கிய சாமிகள். அருகர் எனபாருக்குக் குகைகளும் காணலாம். சங்ககாலத்தில் தெய்வங்கள் கூட சைவசமயமில்லை. பாண்டியனே சைவமானது தேவாரகாலத்தில் தான். திணைகளின் கடவுள்களை பிராமணர் சமஸ்கிருதமாக்கி சேய் ஸ்கந்தன் என்றும், மாய் கிருஷ்ணனென்றும், இந்திரனை வருணன் என்றும் கொற்றவையை காளியாகவும், ஆண்சாமிகளை தம் இறந்த சாமிகள் பெயருக்கும், குணங்களுக்கும் மாற்றினர். புதிதாய் தலபுராணங்களையும் செல்லுமிடமெல்லாம் உருவாக்கி தமிழரின் தாய்வணக்க வனங்களில் கற்கோயில்கட்டி, ஆண்சாமிகளைப் பதியவைத்தனர்.
திராவிடரான தக்கன், இராவணன் ஆகியோர் இந்திராவின் சோமா வெறியாட்டு, காளைப் பலி என்பனவற்றை எதிர்த்ததால் கலாச்சாரமற்ற அசுரரென காட்டப்பட்டனர் என மறைமலையடிகள் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு தம் சட்டி பானைகளில் எழுதிய தமிழரை சூத்திரரென வகுத்து கல்வியை மறுத்தனர். தமிழ் ஏடுகளை சைவமடங்கள் வைத்திருந்தும், அங்கும் அழியலாயின. இதனால் அடையாளத் தடுமாற்றம் ஏற்பட்டது. சைவசமயத்தில் திராவிடக்கலைஞரும் தெய்வமரபாய் மதிக்கப்படவில்லை. கீழ்சாதியாய் வகுக்கப் பட்டனர். சாமிகளின் விக்ரகங்களைத் தம் ஆரியமரபில் செய்வித்தனர்.
தமிழ் பெண் தெய்வங்களை இழிவுபடுத்திய ஆரியம்:
தமிழரின் துக்ககரமான வரலாற்று நிலைமை அத
ன் சாமிகளின் வரலாற்றில் பிரதிபலிக்கிறது. கன்னித்தாய் மரபு கெட்டு ஆண் தெய்வங்களின் சாமிகளாவதை பெண்பக்தியாகப் போற்றியது. தமிழரின் கன்னித்தெய்வம் வல்லியை (சக்தி, சின்னம் வள்ளிக்கொடி) வள்ளி என்ற கலியாண மரபற்ற சக்களத்தியாக்கி ஆரியரின் இரு மனைவி முறையை நிலைநாட்டினர். பெண் தெய்வத்தின் கன்னிப்பூசாரிகள் அடியாள்களாக ஆரியர் கோயிலில் வைக்கப்பட்டனர். மேலும் ஆரியரோடு விபச்சார உறவு ராதையால் தெய்வீகமாக்கப்பட்டது. இவற்றால் தேவடியாள்கள், நாடார் மற்றும் திராவிடப் பெண்கள் பிராமணரால் கெடுபடக் காரணமாகின. ஆரியர் தமக்குத் திராவிட பெண்களைக் களவு முறையில் எடுத்ததன் ஆதாரம் இது.
ஆரியக் கலாச்சாரம் பெண்ணை மதிப்பதில்லை. பெண்கள், பிள்ளைகள் சொத்து. பெண்கள் வேதம் கேட்பதோ முக்திக்கு முயல்வதோ, பூசை செய்வதோ தடையாயிற்று. ஆரியத்தின் முதல்தர தெய்வங்கள் ஆண்கள். பெண்தெய்வ தலங்களை ஆக்கிரமித்து ஆண்சாமிகளுக்கே அங்கு கற்கோயில்களைக் கட்டி தலபுராணங்கள் பாடி தமிழ் மரபை மறைத்தார்கள். உதாரணமாக நூற்றெட்டு தாயின் தலங்களை பிராமணர் எடுத்தபோது அங்கு பூசை செய்த திராவிட அரசர்களை அசுரர் என்றனர். அவர்களை அழிக்க சிவபெருமான் அவர்களின் மனைவியரோடு சேரந்ததால் நூற்றெட்டு ஆரிய பெண்பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் தம் தந்தையரை கொன்றனர். திராவிடரைக் கொல்வது புண்ணியமாதலால் அவர்கள் நூற்றெட்டு ஆரியதேவிகளின் அவதாரம் எடுத்ததாய் புராணித்து அவர்களை ஆரியசாமிகளுக்கு மனைவியராக்கி தமிழர் மரபை வேதியமாக்கினர். அவர்களின் சக்தி ஆண் தெய்வத்தில் உறைகிறதென்று சித்தாந்தம் வகுத்தனர். மேலும் பெண்தெய்வம் கோயிலின் நடுவிலன்றி தள்ளி ஒதுக்கமாயர்த்தப்பட்டிருப்பதை காணலாம்.
ஆனால் தவ்வை போன்ற தமிழரின் பொலிவான மூலத்தாய் வடிவங்களை மூதேவி என்று பெயர்மாற்றி அவளை வணங்கலாகாது என்றார்கள். ஆரியரின் கந்தசாமி வன்முறையால் வல்லியைப் புணர்ந்தபோது, அவளின் சக்தி கந்தசாமிக்குள் வந்தது. தமிழ் மரபுப்படி தாய்த்தெய்வத்தின் சக்தி வேலன் என்ற பூசாரியும் கிராமத் தலைவனுமான அரசனில் இறங்கும். வேலனின் அரசாட்சி இதனால் பிராமணரின் கந்தசாமிக்கு மாறியது. அதனாலேயே தமிழரின் வேல் ஒதுங்கியுள்ளது. திராவிடரின் பெண் தெய்வங்களையெல்லாம் அவற்றின் மனைவிகளுக்கு சக்களத்திகளாக்குவதற்கு சாமிக்கு கல்யாணம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனாலேதான் ஆதிதாயின் தனிவணக்கம் தடைப்பட்டது.
திராவிடரின் போர்க்கலைக்குரிய கொற்றவையை சிவனைக் கொன்ற கரியகாளியாகக் காட்டுவது இக்காலத்தில நடந்த திராவிட ஆரிய போர்களைக் காட்டுகிறது எனப்படுகிறது. இவ்வாறு தாய் வழிபாடும் ஆண்வழிபாடாக மாற்றப்பட்து. கூத்து முதலில் தாய்க்குரிய பெண்பூசாரிகள் ஆடிய வணக்கம் என்று எம் வரலாற்றுக்கு முன்பான பாறை ஓவியங்கள் காட்டுகின்றன. ஊரின் காவல் தெய்வங்களான சங்கிலியன் எனும் கறுப்புசாமி, சுடலைமாடன், கூத்தாண்டவன் எனப் பல குலதெய்வங்கள் தமிழரால் தாயின் தோப்புகளில் வணங்கப்பட்டனர்.
மேலும் குலதெய்வரான கூத்தாண்டவர் நடிகருக்கும், பிள்ளைப் பேற்றிற்கும், பாதுகாப்பிற்கும் காவல் தெய்வமாயிருந்தார். ஆனால் சிவனை நடராசர் என்று 12ம் நூற்றாண்டில் உருவாக்கியபோது கூத்தாண்டவர் கதையை மாற்றும் புராணக்கதை எழுதப்பட்டது. கூத்தாண்டவர் ஆரியரின் முழுமுதற் கடவுளான இந்திரனே என்றும், இந்திரன் பிராமணன் ஒருவனைக் கொன்றதற்குத் தண்டனையாய் கூத்தாண்டவராய் அவதாரமெடுத்ததாரெனவும் பிராமணர் கற்பித்தனர்.
தமிழகத்தில் வேலனே பூசை செய்து பலியிடுவான். அதனால் பெண்தெய்வங்களின் வல்லமை அவனுக்குள் வந்து மக்களுக்கு காவலனாயும், புத்தி கூறுவதற்கும், நீதியுடன் அரசு செய்யவும் தேவையான ஆற்றலைப் பெற்றான். இது சுமெரியர் மரபாயுமிருந்தது. இன்றைய ஆதிவாசிகள் போல் வணங்குவான். தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட வனங்களிலும், தோப்புகளிலும், இயற்கையான வெளிகளிலும் அதிகநேரங்களை சாமி உணர்வில் களிப்பான். இருளர், தோடர் போன்ற பழங்குடியினரின் கிராமத் தலைவன் மலைச்சாரல் அல்லது தர்ப்பைக் குடில் அமைத்து தனித்து தள்ளி வாழ்வான். இன்று கிராமங்களில் மரபை அறியாமல் அப்படியான கட்டுப் பாடில்லாமல் சினிமா வெறியாட்டுகளாக ஒருங்கிணைப்பாடின்றி விரும்பியவர் விரும்பியபடி ஆடுகின்றனர். குறிசொல்லுகின்றனர்.
யாழ் தமிழரின் பூசாரி மரபு பிராமணரிடம்:
இடையில் தமிழரின் பூசாரி மரபு யாழ்ப்பாணத்தில் அழிந்ததால் இன்றுள்ள பூசாரிகள் வரலாற்றுத் தொடர்பில்லாதவர். சோமா வெறியாட்டு ஆரிய கோயில்களில் வழக்கொழிந்தது காலனித்துவ காலத்திலானாலும் சந்நியாசிகளிடமுண்டு. விஷ்ணுவின் அவதாரங்களையும் ஈராக்கின் பூர்வீக புராணங்களில் காட்டலாம்.
பூசாரிகளை நிறுத்தி வழிபாட்டை பிராமணரிடம் கொடுப்பதால் எஞ்சிய தமிழரடையாங்களும் அழிக்கப்படுகின்றன. தேடிப்போய் கிராம மற்றும் ஆதிவாசிகளின் சாமிகள் வலுக்கட்டயாயமாய் அரசால் சமஸ்கிருதமயமாக்கப்படுவதேன்? வேதங்களைத் தமிழிலும் ஓதலாமெனற புதிய சட்டமுண்டு. அர்ச்சகரானாலும் தமிழில் ஆகமக்கோயில்களில் வேதங்களை ஓதுவதற்கு உள்ளே பெரும் எதிரப்புண்டு. அதுவும் ஆரியரின் வேதங்களைத் தான் தமிழில் ஓதப்பயிற்சி பெறுகின்றனர். சாமி மாற தமிழரின் கவிகளும், கலைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கலைவல்லுநர் சாதியில் தாழ்த்தப்பட்டவர்கள். அதனால் வாலிபர் இக்கலைகளை முன்வந்து செய்ய மறுக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டியன் தன் சேனாதிபதிகளுக்கு ஆரியசக்கரவர்த்திகள் என்ற போர்ப்பட்டத்தை அளித்தான். ஆனால் நெல்லூர் எனப்பட்ட நல்லூரில் பரந்திருந்த சங்கிலித்தோப்பும் தமிழரின் வழிபாடும் சங்கிலியன் மகனைக் கொன்ற காரணத்தால் இழக்கப் பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் சமயசுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் வழிபாட்டை உரப்படுத்தாமல் நல்லூர் வைதீக சமயமாகியது நாவலர் காலத்தில் ஆகும்.
முதலில் தமிழகத்தை சமஸ்கிருதமயமாக்கல் தேவார காலத்திலேயே மாணிக்க வாசகர் போன்றவர்களால் பாண்டிய அரசியின் ஒத்தாசையோடு முன்னேறியது. பல தமிழர் இந்து வேதங்களையேற்க மறுத்ததால் தமிழ் நாட்டில் பெரிய வன்முறைகள் நிகழ்ந்தன. முக்கியமாக பரவலாயிருந்த தமிழகத்தின் தாய்க்குரிய சமயங்கள், இயேசுவழி, மற்றும் அறிவுச்சமுதாயம் ஆதரித்த சமணம், பௌத்தம், மாணிக்கியம், யாவும் வன்மையாக ஒழிக்கப்பட்டது, கொண்டாடப்பட்டு கோயில்களில் செதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடெயங்கும் பஞ்சாட்சரமும் திருவாசகமும் மட்டுமே ஒலிக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதனால்தான் இன்றுவரை தமிழகத்தில் மக்கள் திராவிடம் ஆனால் சாமி ஆரியம் என்ற விசித்திரமுள்ளது.
சைவசாமிகள் யார்?
சைவசாமிகள் யார்? வேதங்களின் மூன்றாவது தெய்வமான சோமாவின (சோமா ஒரு போதைப் பூண்டு) வெறியாட்டு வணக்கம் திராவிடரால் எதிர்க்கப் பட்டதால் அருகி இறந்து போகலாயிற்று. பின்பு ஸ்கந்தா என்ற குப்தர் காலத்து இளம் போர்த்தெய்வம் செல்வாக்குப் பெற்றதும் அவரை சோமா-ஸ்கந்தா எனறு நாமமிட்டனர். சோமா வெறியாட்டு சம்பந்தப்பட்டவராதலால் விடாது ஆடும் நிலையில் செதுக்கப்பட்டார். பின்பு தமிழரின் தவ்வையின் மகனை சோமா-ஸ்கந்தாவால் மாற்றீடு செய்தார். அதனால் தான் தேவாரகாலத்தில் சிவனுக்கருகிலன்றி பார்வதியருகில் அவரைக் காட்டினாரகள். ஸ்கந்தஸ்வாமித் தெய்வம், அதன் உச்சரிப்புக் காட்டுகிறபடி, ஒரு தமிழர் தெய்வவடிவமல்ல.
மேலும் இந்தியாவுக்குள் வந்தபிறகு தான் ஆரியர்களின் ஏழு குழுக்களின் ரிஷிகளும் வேதங்களை எழுத்திலிட்டனர். அது ஈரானியரின் அவெஸ்தா சமய வேதங்களை மொழியிலும், பொருளிலும் மிகவும் ஒத்திருந்தது. உச்சரிப்பும், சாமி பெயர்களும் மாறலாயின. அதனால் தான் மந்திர உச்சரிப்பு பிராமணரால் பரம இரகசிமாய்க் காக்க அதனால் இந்து வேதங்களை வேறெந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது என்றது பிரமாணம். அதனால் வேதங்களின்படி சூத்திரராகிய தமிழருக்கும் பெண்களுக்கும் முத்தியில்லை. அவெஸ்தா வேதங்களிலும் சிவன் என்ற தெய்வம் இருக்கவில்லை. எனவே சிவனை ஆரியரின் தெய்வம் என்றோ, தமிழரின் தெய்வமென்றோ கூறுவதற்கான ஆதாரங்களில்லை.
கந்தசாமி யார்?
கந்தசாமி யார்? ஷண்முகா (ஆறுமுகம்) என்று உடலால் ஒன்றிணைக்கப்பட்ட ஸ்கந்தா, குமரா, காரத்திகேயா, ஆட்டு முகமுடைய நைகமேயர், விசாகா, பத்ரகாசா ஆகிய கிரஹாக்களாகிய (குகா) என்ற ஆவி உருக்களாகும். ஆரியர் இமயச்சாரல்வழி வருகையில் இவற்றிற்கு பயந்து மக்கள் சாந்திசெய்வது கண்டனர். புராணம் எழுதும்பொழுது மின்னல் அல்ல சிவன் உருவாக்கிய ஆறு மாத்ராதாய்கள் வளர்த்தார்கள் என்றனர். ஸ்கந்தா ஆண்பிள்ளைகளைப் பெறும் தாய்மாருக்குக் காவல் தெய்வமாவார் (ஆரண்யகபரவன், புராணங்கள், இராமாயணம்) இதனால் நல்லூர், மாவிட்டபுரங்களில் ஆட்டுப் பலி, நடத்தப்படும். குப்த வீரர் வணங்கும்படி ஸ்கந்தனுக்கு வாலிப போர்வீரன் உருவம் கொடுத்தனர். ஸ்கந்த ஆரியமரபுக்குள் உள்வாங்கப்பட்ட சாமியாகும்.
பெண்தெய்வங்களை ஆண்தெய்வத்துக்குப் பக்கத்தில் சக்களத்தியாய் அமர்த்திய ஆரியம்:
இந்துவேதங்களிலேர, சங்ககால தமிழகத்திலேர சிவன் என்ற நாமமில்லை. ஆயினும் அவற்றிலும் பழமையான சிந்துசமவெளி முத்திரைப்பலகையில் மிருகங்களோடும் அமர்ந்திருக்கும் உருவத்தையும் சைவர் சிவன் என்கிறார்கள். சிந்துசமவெளி மொழி இன்றுவரை வாசிக்கப்படவில்லை. இப்படியான தொல்லியல் சின்னங்கள் பல நாடுகளிலும் பெண்தெய்வத்தோடும் உள்ளன. எனவே அது பசுபதி, சிவன் என்ற கருத்து உருவாக்கப்பட்டதூகும்.
தமிழரல்லாத அரசர்கள் வைதீகத்தை ஆதரித்தனர். தேவாரகாலத்தில் தான் வைதீகம் அரசின் மதமாக்கப்பட்டது. ஆதிதொட்டிருந்த தமிழர் வழிபாடுகள் ஒடுக்கப்பட்டன. ஆதிதிராவிடரின் வழிபாடு இயற்கை மற்றும் தாய்த் தெய்வங்கள் பற்றியது. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான தமிழகத்தின் சிறுமலை ஊரிலுள்ள சங்கிலிப்பாறை இடுக்கிலும் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஜார்கண்டிலுமுள்ள பாறை ஓவியங்கள் இந்த உண்மைக்குச் சான்றாகின்றன. மேலும் அக்கினி ஆற்றடி, அரிக்கமேடு மற்றும் சிந்துசமவெளி ஆகிய இடங்களில் தொல்லியல் தாய்ச்சிற்பங்கள் கிடைத்துள்ளன. இவை யாவும் ஆதியிலே இந்தியாவில் தாய்த்தெய்வ வழிபாடு தான் முக்கியமாய் இருந்ததைக் காட்டுகின்றன.
தமிழரின் தாய்த்தெங்வங்கள் இருவகை. ஒன்று தவ்வை (த ஓளவை) எனப்படும் வளத்துக்கான தெய்வம். இன்றும் மண்ணாட்சி அம்மன், மின் ஆட்சி அம்மன் (மின்னல் மழை, நீர்) என்ற பெயர்களில் வணங்கப் படுவாள். மற்றது காவலவீரரின் மரபுக்கும் அரசியலுக்கும் தெய்வமான கொற்றவை (கொற்ற ஓளவை) ஆவாள் (ஒளவை என்பது கனம்பெற்ற பெண், கிழவி கொற்றம் என்பது அரசியல், வீரம்). இவர்களின் வழிபாடு பல்லவர் சைவராகும் வரையிலும் தமிழரிடையில் பரவலாய்க் காணப்பட்டது. பழங்குடியினரிடை இன்றுமுள்ள ஏழுகன்னியர் வணக்கத்தைக் காட்டும் ஆதிமக்களின் ஓவியங்கள் குகைகளில் காணப்படுகின்றன.
அப்படியானால் தமிழரின் பலமான தாய்த் தெய்வ வழிபாட்டை ஆரியர் மேற்கொண்டதெவ்வாறு? தேவார காலத்தில் சமயகுரவரின் இலக்கு சிவனின் வணக்கத்தை மட்டுமே தமிழ் மண்ணெங்கும் நிலைநாட்டுவதாகும். அதற்கு அரச ஆதரவைப் பெற்றனர். இதற்காகத் தமிழரின் பெண் தெய்வங்களையெல்லாம் ஆரியமரபில் சிவனின் காமி, அல்லது கந்தனுடைய களவுவகை மனைவியாக்கப் பட்டனர். ஹமுராபி காலத்தில் இது பாபிலோனிலும் தாய்த்தெய்வ வழிபாட்டை ஒழிக்கச் செய்த யுக்தியாகும். திராவிடரின் கற்புடைய கன்னித்தாய் வடிவத்தை சிவகாமி, உண்ணாமுலை உமையாள், மற்றும் தம் ஆரிய பார்வதியாயும் இடத்துக்குப் பொருந்த உருமாற்றினர். தாய்வடிவம் கற்புக்கு இலக்கணமானது. தன் பிள்ளைகளை மண்ணால் சிருஷ்டித்ததால் ஆதித்தாய் கன்னித்தெய்வம். கொற்றவையையும் தமிழ் எருது அடக்கும் வீரத்துவமரபில் இல்லாமல் ஆரியரின் போர்வடிவாய் சிங்கத்தின்மேல் அல்லது காளியாய்க் காட்டினர். கொற்றவையின் காவல் தெய்வமரபு யப்பானிய சமுராய் மரபு போன்ற சிரத்தையுடையது. கலாட்டி போன்ற வீரக்கலைகளையும் உடல், மன அடக்கங்களையும் பற்றியதாகும்.
உருமாற்றிய பெண்தெய்வங்களை ஆண்தெய்வத்துக்குப் பக்கத்தில் சக்களத்தியாய் அமர்த்தி அரசனின் கற்கோயில்களில் பூசித்தனர். கற்பின் பரிசுத்த மரபு கெடுக்கப்பட்டது. சந்கத்தமிழ் பெண்தெய்வங்களான பழையோள், செல்வி, கன்னி, வல்லி, பத்தினி, கண்ணகி மற்றும் பௌத்தரின் பகவதி என்பன இதனால் ஒழிந்தன. கண்ணகி, மணிமேகலை ஆகியதெய்வங்கள் காப்பியங்களில் கற்புடைய கதாநாயகிகள் ஆயினர். உதாரணமாக வல்லித்தெய்வம் கந்தனுக்கு சக்களத்தி முறையில் கொடுக்கப்பட்டாள். தமிழ் கல்யாணமுறை முறையிழந்தது. இவ்வாறு ஆரியரின் கல்யாணச் சடங்கு தமிழரிடை நிலை நாட்டப்பட்டது. எதிலும் பிராமணரில்லாமல் காரியங்கள் தொடக்க முடியாது போயிற்று. அரசர்காலம் முடிந்த பின்னு தான் சிந்தனைச் சுதந்திரம் தமிழகத்திற்கு மெல்ல மீண்டது.
தமிழ் செம்மொழி:
மதராஸ் ஆளுநர் எலிஸ்துரை 1800களின் தொடக்கத்தில் தமிழ் சமஸ்கிருதமின்றி தனித்தியங்கக்கூடிய செம்மொழி என்று தெரிவித்திருந்தார். அதை நிறுவ இலக்கிய, கலாச்சார மற்றும் தொல்லியல் ஆதாரங்களைத் தேடினார். அக்காலத்தில் ஐரொப்பிய அறிஞருக்கும் காலனித்துவ அரசாங்கக்களுக்கும் சமஸ்கிருதத்திலிருந்துதான் ஆங்கிலம் உட்பட சகல இந்திய மற்றும் ஆரிய மொழிகளும், எழுத்துக்களும் உருவாகின என்று பிராமணரால் கூறப்பட்டது. அக்கருத்து இருக்கு வேதத்திலிருந்தே வந்தது. அது பிழை என்று காட்டப்பட்டும் அக்கருத்து நிலையிலிருந்து இதுகால் எழமுடியவில்லை. ஆங்கிலேய கல்வி பயின்ற பெரும்பாலான இந்திய அறிஞரும் பிராமணராயிருந்தனர். ஆதனால் மதராஸில் ஒரு வீதமாய் இருந்திருந்தாலும் பிராமணர்களே அதிக செல்வாக்குப் பெற்றிருந்தனர்.
பிராமணர் யார்?
பிராமணர் யார்? இன்றைய உயிரணு ஆய்வுகள் பிராமணர் ரஷ்ய ஆண் மரபணுவுடைய வம்சாவழி எனக் காட்டுகின்றன. அவர்கள் சாமிகளும் வேறாயிருந்தன. இந்து வேதங்களின்படி ஆரியரின் ஆதி மும்மூர்த்திகளாவன: (i) சூறாவளி கடவுளான இந்திரன் (ii) யாகத்தின் அக்கினி (iii) போதைவஸ்தான சோமாப் பூண்டு என்பவர்களாவர். இந்துவேதங்களின் சுலொகங்களில் தெய்வங்களுக்குப் புகழும், வேண்டுதல்களும் மேலும் எதிரிகளுக்கு சாபங்கள், சாபம் நீக்க மந்திரங்கள் என்பன உள்ளன. அவர்கள் இடையராக அலைந்த காலத்தில் மின்னல், சூறாவளி, வெள்ளம் என்பனவற்றால் அழிவுகள் ஏற்பட்டன. இந்திரா இவற்றின் தெய்வமென்று கொண்டு, இந்திரனுக்கு முந்நூறு பானை சோமாவும் ஆயிரக்கணக்கான காளைகளும் பலியிட்டனர். சோமாப்பூண்டு சாமியாரின் கஞ்சா என்பன போதைவஸ்துக்கள். இருக்கு வேதம் சோமா வெறியாட்டு வழிபாடில் ஓதுவதாவது ”நாம் சோமாவைக் குடித்துள்ளோம். ஆதனால் நித்தியஜீவிகளாயினோம். தெய்வங்களுக்குரிய ஒளியை அடைந்துவிட்டோம்” என்பதாகும்.
கி. மு 1500க்கு முன் வடஇந்தியாவுக்குத் தன்னும் ஆரியர் வரவில்லை:
ஆனால் கி. மு 1500க்கு முன் வடஇந்தியாவுக்குத் தன்னும் அக்காலத்தில் ஆரியர் வரவில்லை. ஏனெனில் சிந்துசமவெளி தொல்லியல் ஆராய்ச்சிகளில் ஆரியமரபணு காணப்படவில்லை. அப்போ இந்து வேதங்கள் எழுத்தில் இல்லை. ஆனால் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தாய் வழிபாடும், கூத்தும், மூலிகை வனங்களும் இருந்துள்ளது. அதாவது வைதீகம் தமிழரிடம் இருந்த சமயமில்லை. தமிழகத்தில் வைதீகசைவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் அரசர்களின் கீழ் வலியுறுத்தப் பட்டது. எனவே தமிழரின் சமயகலாச்சாரம் முற்றிலும் வேறாகும். அது மாறியதெப்படி?
தமிழர் சமயம் பெரும்பாலும் மறைந்து போனாலும், பாதுகாக்கப்பட்ட சங்ககாலத்து தமிழ் இலக்கியங்களினூடாகவும், அக்கால சமய சின்னங்கள், பிறநாடுகளிலுள்ள எம் ஏடுகள், வரலாற்றுக் குறிப்புகள், ஆதிவாசிகள் வழிபாடுகளிலும் அதன் எச்சங்களை காணலாம்.
சங்ககாலத்தின் பின் தாய்வழிபாடு ஒடுக்கப்பட்டு வந்ததைக் காணலாம். உதாரணமாக கன்னித்தெய்வமான மணிமேகலை உட்பட ஏழு திவ்ய நாட்டியரோடு எட்டாவதாய் இறைவன் பெயரும் சேர்க்கப்படுகிறது. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பதினொரு கூத்து வகைகளில் ஆண்தெய்வம் இரண்டு கூத்துக்கள் ஆடியதாகவும், பலகாலம் ஆடல் தலம் தாய்க்குரியதாய் இருந்ததாயும் கூறுகிறார். தலைப்பாட்டும் அவளுடையதே. மேலும் ஏழுகன்னியரில் இளையவள் தனதாயிருந்த வனத்தில் ஏற்பட்டுள்ள கொடுமை பற்றியும், ஆட்டத்தில் காளிபோன்று கோபமுற்று ஆடியதும், பின் இறைவனை ஆட்டத்தில் வெல்ல அருளியதாகவும் கூறுகிறார். ஆனால் தேவாரகாலத்தில் தமிழகத்தின் ஆடல் மட்டுமல்ல பெண்வழிபாட்டுக்குரிய வனங்களே பறிபோனது தெளிவாகிறது. உதாரணமாக தேவாரகாலத்தின் இடையிலேயே திருவாலங்காடு ஆண்தெய்வத்துககு பறிபோனது பற்றி காரைக்காலம்மையார் ‘‘அணங்கு காட்டில் இறைவன் ஆடுமே“ என்கிறார். அதாவது தமிழகத்தில் பக்திகாலத்தின்போது தமிழ் தாய்த்தெய்வத்தின் வனங்கள் தோப்புகள் யாவுமே பறிபோயிருந்தன.
சிதம்பரம் கற்கோயில் கட்டப்பட்டுள்ள தில்லைவனம் முன்பு தாயின் பெரிய வேங்கைமர வனமாயிருந்தது. மேலும் திருப்பதி எழுந்துள்ள வனமும் தாயினதே. தமிழரின் மாயோனை மாற்றி கிருஷ்ணர் என்றும், பெருமாள் என்றும் தலபுராணங்கள் எழுதப்பட்டன. ஆனால் திருப்பதியில் காலையில் பெருமாளின் கதவு திறந்ததும் அவர் கண்விழிப்பது எதிரேயுள்ள தாயின் ஆதிசின்னமான பருகும் கன்றுடைய பசுவின் சிற்பத்திலேயாகும். கோயில்களின் வெளிப்புறத்தில் திராவிட காவல் சாமிகள் கோயிலின் சிலைகளாய் முழிக்கின்றன. சிங்கங்கள் பல்லவ மரபுக்குரியன. பல்லவர் ஈரானிய வம்சத்தார். ஈரான் பாபிலோனிய கட்டட மரபை பாவித்தது. இவ்வாறு தேடினால் கோயில்களில் மறைந்துள்ள தமிழரின் தாய்ச் சின்னங்களைக் காணலாம். எமது பாறை ஓவியங்களில் வேங்கைப் புலிகளும், கொம்புடைய மலை ஆடுகளும் மற்றும் சிரியா நாட்டிலுள்ளது போல் ஆறு பெண்களின் ஆட்டமும் வல்லிக்கொடியும் போர்வையுடுத்த பெண்பூசாரியும், காணப்படுகின்றன. இன்று சினிமாவில் தவறான உருவாடும் பெண்கள் தமிழரை இழிவுபடுத்தக் காட்டப்படுகின்றன.
இந்து வேதங்களின் ஆரியசமயமும் தமிழகத்தின் சமயங்களும் மக்களும் முற்றிலும் வேறானவை என்பது இன்று தெளிவாயுள்ளது. டீஎன்ஏ என்ற உயிரணுவோ, தெய்வங்களோ வேறு வேறு. ஆயினும் தமிழ் வழிபாடுகள் இன்றும் பிராமணமயமாக்கப் பட்டு வருகின்றன. ஆதிவாசிகளின் பூசாரிகளை இந்திய அரசாங்கம் மாற்றிப் பிராமணரை வைக்கின்றது. பிராமணரால் தமிழரின் பூர்வீக சாமிகள் ஆரியர்களாய் மீளுருவாக்கப் படுகின்றன.
சங்கிலியன் தோப்பை ஸ்கங்தஸ்வாமி தேவஸ்தானம் ஆக்கியது எப்படி?
யாழ்ப்பாண அரசன் பெயர் சங்கிலியன் என்றால் அவர்கள் குலதெய்வம் சங்கிலிக் கறுப்பன் என்ற காவல் தெய்வமாகும். சங்கிலியன் தோப்பை ஸ்கங்தஸ்வாமி தேவஸ்தானம் ஆக்கியது எப்படி? தோப்பு என்றால் உரிமை தாய்த்தெய்வத்துக்காகும். அவள் மகன் மாந்தன். மாந்தனுக்கும் இமயமலைச்சாரல் சாமிகளான கந்தனோ, குமரனோ, குகனுக்கோ சம்பந்தமில்லை. மாந்தனை ஸகந்தனாக்கி, கறுப்பிலிருந்து ஆரியரின் தங்க நிறமாக்குவது ஒரு படிமுறைச் செயற்பாடாகும். மாந்தனின் கன்னித் தாய்த்தெய்வத்துக்கு சிவனை கணவராக்கி, மாந்தனை சோமாஸ்கந்தனாக்கி, ஸ்கந்தன் கன்னித்தெய்வமாhன வல்லியை சேர்ந்து தெய்வாணையின் சக்களத்தியாக்கி, தாயின் சின்னத்தை அழித்து, தமிழ் விவசாய வேல் (மின்னல், மழைச்சின்னம், கூரானமண்வாரி சுமெரியம்) அடையாளத்தை ஸ்கந்தனின் போராயுத வேலாக்கி, பூசாரியை நீக்கி பிராமணனை அர்ச்சகனாக்க வேண்டும். தமிழ் வழிபாட்டைக்காண அத்தனைபமுடி பின்செல்ல வேண்டும். ஆதைச் சிந்தித்து அறியவேண்டும். தமிழர் தாய்வழிபாடு சைவத்துக்கு முந்தியது, சைவ மரபுக்கு வெளியேயானது. அதில் பிராமணரில்லை. பூசாரி அவரவர் கிராமத்தவர். அதனால் சாதியம் இல்லை.
இந்தியாவுக்குள் வந்தபின் இந்து சமயம் தன்னை மாற்றியது:
இந்தியாவுக்குள் வந்தபின் இந்து சமயம் தன்னை மாற்றியது. இந்தியாவில் விவசாயக் கலாச்சாரமிருந்தது. எனவே ஆரியர் காளைப்பலியை விட்டு, யாகம் உயர்ந்தது என்றனர். தீவளர்க்க நெய் தேவைப் பட்டதால் அரசனிடம் ஆயிரமாயிரம் பசுக்களைத் தானம் பெற்றனர். ஓமக்குண்டங்கள் கட்டினர். அரசனுக்கு வெற்றயும், நிரந்தரமாக மோட்சமும் பெற்றுத்தருவோமென்று பல யாகங்கள் செய்ய வைத்தனர். யாகத்தின் சாமிக்கு அக்னி – இந்திரா என்று புதுப்பெயரிட்டனர். பின் குப்தர் காலத்தில் போர்வீரர் செல்சாக்குப் பெற்றபோது ஸ்கந்தாவை போர் வடிவில் யாவணர் மற்றும் வீரருக்குப் தெய்வமாக மாற்றினர். சிவனைத் தெய்வமாக்கியபோது சோமாஸ்கந்தரை உருவாக்கி பார்வதி மகன்போல் விக்கிரகவழிபாடு தவ்வையும் மகன் மாந்தனிடத்தில வைத்தனர். சங்ககாலத்து பூசாரிமரபுக்குரிய வேலனை நீக்கி வேலனை ஸ்கந்தன் என்றனர். தோப்பின் தாய்த்தெய்வத்தைப் பூசித்த கன்னிமாரைத் தப்பவிடாது ஆரியகணங்களின் தலைவனை (பிள்ளையாரின் பூர்வ உடலில்லாத உருவம்) வழியில் தடையாய் வைத்து கந்தன் வள்ளியைச் சேர்ந்தான். தாய்வனம் ஸ்கந்தன் நிலமாகியது. சங்க இலக்கியத்து வேலனை ஸ்கந்தா என்று ஆரியமாக்கியது எவ்வாறு? பாண்டியர் தமது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அருகர் சமயத்திலிருந்து சைவத்துக்கு மதம் மாறியதால் ஆரியமரபை ஆதரிக்கலாயினர்.
வேலனைத் தமிழில் பொதுப்பெயரான முருகன் என்றழைத்து தமிழரின் வேலன் மரபை ஒழித்தனர். இப்படி திராவிடரின் அடையாளங்களும், ஆசாரங்களும், கலைகளும் மறைய ஆரிய கோயில்கள் ஓங்கினதற்கு நல்லூர் சாட்சி. வேலன் சங்கிலிக் கறுப்பன் ஸ்கந்தஸ்வாமி ஆகினான்.
அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழி – கத்தோலிக்கத்தை மறுதலிக்க மறுத்தோர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டனர்:
ஆரியரின் தெய்வங்கள் திராவிடர் செய்தால் வழிபாட்டை ஏற்கமாட்டா. ஆதனால் சாதியில் அரசன் பிராமணரின் கீழ் என்று இருக்கு வேத முடிவில் எழுதினர். அதை மீறுபவருக்கு வேதங்களில் சாபங்களும் தண்டனைகளும் எழுதினர். தேவாரகாலத்தில் மாணிக்கவாசகர் ஒரு மந்திரவாதி என்றே அழைக்கப் பட்டார். அவரிட்ட சாபங்கள் பற்றி மதம் மாறாது தப்பியோடிக் கேரளாவில் தஞ்சம் பெற்ற மணிக்கிராம கிறிஸ்தவர்களின் ஏடுகளில் காணப்படுகிறது. சங்கிலியரசன் தன் மகன் உட்பட்ட கத்தோலிக்கத்தை மறுதலிக்க மறுத்தோரை யாழப்பாணத்தில் கொல்லும்போது கொடுத்த மறுமொழி அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழி என்ற வாக்கே என்று காணலாம். இன்று இரத்தசாட்சிகள் மரித்த சங்கிலித் தோப்பின் கிறிஸ்தவ கோயிலில் வழிபாடு வைதீகமயமாக்கப்படுகிறது. சற்சூத்திரர் குருவை கேள்விகேட்கப் படாது. அது குருநிந்தை.
திராவிடர் கலாசாரம், மொழி, மற்றும் நெறியில்லாதவர் என்கிற வேதசுலோகங்கள் தவறு. தமிழ்மொழி தந்த ஆரியமுனி அகஸ்தியர் கமண்டலத்தைக் காகம் தட்டி எம் காவேரியாறு புனிதமானது என்ற விளக்கங்களும் சிங்கள தலபிரச்சாரங்கள் போல் இனமறைப்புக்கு வழியிடும்.
நாவலர் பைபிளில் சைவவழிபாடு உண்டென்றார். இன்று இயேசு கற்க இந்தியா வந்தார் என்பதும் புனைகதை. பதிலை பைபிளிலேயே காணலாம். காரணம் சுமெரிய மரபாகும். எழுத்தில் பதியப்பட்ட உலகத்தின் முதலாவது சமயம் சுமெரியமாகும். இயேசுவழி வைதீகமல்ல. ஆனால் கிறிஸ்தவத்திலும், திராவிடத்திலும், வைதீகத்தின் ஆரிய திரிபிலும் பல சுமெரிய ஆசாரங்களுள்ளன. எப்படி?
சுமேரியத் தொடர்பு:
தமிழகத்திற்குரிய மரபணுவுடையோர் அதாவது திராவிடர் மெசப்பத்தேமியாவில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த சில மக்களில் காட்டுகிறது. சிந்து மரபணு தமிழகத்தின் ஆதிவாசிகளில் காட்டுகிறது. அதாவது தமிழகம், சிந்துவெளி, மெசப்பத்தேமியா நாடுகளில் வாழ்ந்த மூன்று மக்களுக்கும் உறவுமுறை இருந்திருக்கின்றது.
இயேசுவின் மூதாதையர் சுமெரியாவின் ஊர் என்ற ஊரினர். அடுத்த ஊர் ஈளம், மாரி என்பனவாகும். சுமெரியர் கருந்தலையர் எனப்பட்டனர். சுமெரிய சாமிகள் தமிழ் சாமிகளே என்று கருதப்படக்கூடிய அளவுக்கு பல விக்கிரகங்களும் ஆசாரங்களும் ஒத்துள்ளன. எனவே சுமெரிய சாமிகளை வைத்து தமிழரினதும் சிந்துசமவெளியினதும் தெய்வங்களை விளங்கலாம். ஆனால் ஆரியர், மற்றும் ஈரானிய சாமிகள் பின்னைய பாபிலோன் மரபுக்குரியன. பாபிலோன் சுமெரியாவை சாமிகளை சுக்கு நூறாக்கினாலும் சுமெரிய மரபை எடுத்துத் திரித்தது. ஆரியர்களின் இனமும் சமயமும் பாபிலேரனை ஆண்ட இரானோடு கலந்ததாகும். இதனால் வரலாற்றின் முதற் கலாசாரமான சுமெரிய மரபு, திராவிடம் என்பன ஆரிய வேதங்களுக்கு முன்னையவை.
சுமெரியாவின் சமயம் வரலாற்றுக்கு வெகுமுந்தியது. அவர்களின் மூலகடவுள் காரணமின்றி படைப்புக்கப் பால் நித்தியமாய் வாழ்வதால் சுவன் அகரணா எனப்பட்டார். அவர் அரூபியான ஆவியானவரும், சிருஷ்டிக்கப்படாத மூலரும், காலக்கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவரும், பாலினபேதமற்றவருமாவார். சுகல சிருஷ்டிப்பு, வளர்த்தியும், மீட்பும் அவர் சித்தப்படியே நடக்கின்றன. அவருக்கு கையால் உருவம் செய்யவது தடை. கிறிஸ்தவத்தின் கடவுள் இக்குணங்களை உடையவர்.
ஆனால் பாபிலோனியர் விக்கிரமரபில் சுவனை ஒரு இளைஞனாகவும், நரசிம்மராகவும், அர்த்தநாரீசர் அதாவது இருபாலினமானவராயும் காலத்தைக் குறிக்கும் பாம்போடும், முக்கண்களோடும் உருவகம் கொடுத்தனர். சுமெரியரின் சிருஷ்டியோடு சம்பந்தமான தெய்வம் நம்மா (ந புனித) என்ற நித்யமாய்க கன்னியாயுள்ள தாய். நம்மாவின் விக்கிரக மரபுச் சிலைகள் பத்தாயிரம் ஆண்டு பபழமையான சிலை யோர்தானிலும், ஹரப்பா மற்றும் தமிழகத்தின் அக்கினி ஆற்றடியிலும் அதே வடிவத்தில் கிடைத்துள்ளன.
தமிழரின் தவ்வை போல் பரந்த மார்பும் அகன்ற இடுப்பும் மாலைச்சரங்கள், காப்புகள், ஒட்டியாணமும், காதில் தோளைத்தொடும் தோடும், மெக்காவளைய காதணிகளும், ஒமேகா வடிவக் கொண்டையும் கொண்டுள்ளன. தவ்வை, கொற்றவை போல் சுமெரிய விக்கிரகங்கள் திராவிட கறுப்பு நிறமானவை. கரிய எரிமலைக் கல்லால் செதுக்கப்பட்டவை. இயேசுவின் வரலாறு தொடங்கும் ஊரான ஊரின் முதன்மைத் தாய்த்தெய்வத்தின் பெயர் ஊர் நம்மா. சுமெரியா சந்திர வழிபாடுடையது. அதாவது விவசாயம்,
வெள்ளநீரின் ஆளுமை, விருத்திக்கான கர்ப்பமுறுவதோடு சம்பந்தமானது. சிவன் சூரியமரபினர்.
அதாவது சுமெரியரின் நம்மவுக்கும் தமிழரின் தாய்க்கும் அதே கருப்பொருளுண்டு. நம்மா நித்திய கன்னித்தாய். கற்புக்கு அரசி. களிமண்ணிலிருந்து தெய்வங்களையும் பின் சகல சிருஷ்டிகளையும் படைத்து அவைகளுக்குள் உயிரை ஊதினாள். நம்மா பசுபத்தினி, அதாவது விலங்குகளுக்குத் தாய். விவசாயத்தின் தெய்வம். மகாபலிபுரத்தில் காணும் பசுவும் பருகும் கன்றும் அவள் சின்னம். தவ்வை போல் கையில் தானியக் கற்றைக் கொத்தை பிடித்தவள், அவளின் கோயில் தமிழக ஆதிவாசிகளான தோடர், இருளர் கோயில்கள் போல் தர்ப்பை, நாணல் மற்றும் மூங்கில் என்பவற்றால் கட்டிய குடில் வடிவினது.
தாய்ச்சுழி வடிவில் நுனியில் வளைத்த நாணல் கதவடியில் வைக்கப்பட்டிருக்கும் (பிள்ளையார் சுழி என்பரின்று). வெளி, வனம், தோப்பு யாவும் தாயின் சின்னம். அவளுக்கே உலகில் முதல் படிப்படி மேடுகளில் கோபுரக்கோயில் கட்டப்பட்டது. கோபுர உச்சத்தில் நாணல் குடில் (பல்லவர் மரபு என்பரின்று). அவள் படைத்த முதல் மக்கள் என்கி, இன்அன்னா. இன் அன்னா இலட்சுமிபோல் பெண்லட்சணம் சகலமும் கொண்டவள். முதலில் ஒரு இடையனைக் காதலித்தாள். பின் சுமெரியர் விவசாயிகளானபோது தாய், அண்ணன் விருப்பதிற்கு இணங்கி துமளியை (சூரியன் சின்னம்) மணந்தாள். இன்னன்னா சாமியாகவும், தேவடியாள்களுக்கு சாமியாகவும், வலிமைமிக்க போர்க்குணமுடையவளாகவும் வழிபடப் பட்டாள்.
இவளால் பேச்சுக் கலயாணமும் களவுமுறைக் கலயாணமும் இரண்டுமெ ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஆதி மரபு களவுக் கல்யாணமல்ல. பாபிலோனிய இளவரசி செதுவனா சுமெரியர் பூசாரி மரபில் தலைப்பாகட்டி, பூமுடித்துஇ இடது தோள் தாவணிஇ அணிந்திருப்பாள். பக்திவாசகங்களெழுதி சுமெரியர்களின் ஸ்வரத்தோடு பாடினாள். என்கி வான் தெய்வமாதலால் அவர் காற்றில் உறையும் ஆவிகளுக்கும் பேய்களுக்கும் தெய்வம். காரைக்காலம்மையாரின் பேய்மகளிர் வழிபாடு அவ்வகையே. என்கியின் பூசாரி நிர்வாணி. இவ்வாறு சுமெரிய சமயமுறைப்படியே தமிழரின் விக்கிரகங்களையும் வாசிக்கலாம்.
ஆனால் ஆரிய மரபு அவர்கள் வாழ்ந்த நாடுகளான ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஈரானின் பாபிலோனியா என்பவற்றின் அம்சங்களுடையது. விவசாயமும், காவலும் அல்ல, போர் போற்றப் பட்டது. ருத்ராவும், காளியும், பாபிலோனிய மரபை ஒத்தவை. சுமெரியரும் தமிழரும் யப்பானியரின் சமுராய் போரவீரர் போரைக் காவலாயும் வீரத்தை தற்கௌரவத்தோடு சம்பந்தமான ஒரு சிரத்தையாகக் கொண்டிருந்தனர்.
இன்றும் திராவிடருக்கு எதிரான கருத்துக்களை கற்பிக்கின்றனர்:
இது பழங்கதை மற்றும் பிரச்சனைக்குரியது என்று வரலாற்றை மறைக்கின்றனர். இது தாழத்தப்பட்டவரின் ஆனால் யாழ்ப்பாணத்தில் சைவம் என்றால் தமிழ், தமிழ் என்றால் சைவம் என்ற வாக்கியம் பழமொழி போல் நம்பப்படுகிறது. உதாரணமாக, பல்கலைக்கழகத்துக்கு சைவரல்லாத நல்லூர்த் தமிழர் ஒருவர் முறைப்படி துணைவேந்தராய் பதவியமர்த்தப்பட்டதும் உடனே கொடும்பாவி எரிக்கப்பட்டது. தமிழருக்கு இந்துக் கலாசாலை வேண்டுமென்றதால் கலாசாலை கிடைப்பதில் தாமதுமுமானது. ஏன் என்று யாரும் வினவுவதில்லை. யாழ்பல்கலைக்கழகம் பாவிக்கும் பரமேஷ்வரா கோயிலில் கூட தமிழ்மரபில் வழிபாடு செய்வதில்லை. ஆரியர் சூத்திரவேதங்கள் என்றெழுதிய இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணக்கதைகள் என்பவை திராவிடரின் இருப்பையும், தன்மானத்தையும் பாதித்து வருகின்றன. அதை ஆராயாமல் இன்றும் தமிழ்ப் பாடங்களிலும், கலைவிழாக்களிலும் சமயத்திலும் கூட தமிழ் குழந்தைகளுக்கு திராவிடருக்கு எதிரான கருத்துக்களை கற்பிக்கின்றனர். தமிழ் ஒரு திராவிட மொழி. சைவம் அதைப் பாவிக்கும் ஒரு ஆரியமரபுச் சமயம்.
தமிழ்ப் பிள்ளைகள் தம் தமிழ் அடையாளத்தை புரியாதுள்ளார்கள். ஒரு தலைமுறை போதும் தமிழ்த்தெய்வ மரபு மறைவதற்கு. தமிழர் மனதைக் கவர்ச்சியான சினிமாவின் சாமிகள் கவர்வதால் தமிழரின் ஆன்மீகத்தின் கற்புநெறியை மறக்க வைத்துள்ளனர். கிராமங்களில் பாட்டிக் கதைகளாகவே தமிழர் சமயம் பேணப்படுகிறது. தமிழ் வழிபாட்டின் புராதன இயலும், இசையும், நாடகமும் தள்ளுண்டதால் தரமிழந்துள்ளன. தமிழ்க் கலை மரபு தாழ்ந்த சாதிகளின் அடையாளமென்றும், தமிழர் தெய்வங்கள் தெய்வங்களில்லை எனவும் பழிக்கின்றனர். பிராமணர் மனித மாண்புக்கெதிராக தமிழருக்கு வகுத்த சாதியையே இனத்துக்கு மேலாய் ஆமோதிக்கின்றனர். அச்சிந்தனை பிழை. அதனால் சாதியம் திராவிட இன ஒடுக்குதலின் மறைவான உத்தி எனலாம்.
தமிழ்நாட்டின் தமிழ் அடையாள விளிப்பு இங்கும் பரவுமா?
தமிழருக்கு தமிழ் என்றால் சைவம், சைவம் என்றால் தமிழ் என்ற சிந்தனை அபாயமானது. உதாரணமாக உலகறிந்த ஒரு கல்விமான் யாழ் துணைவேந்தராய் அமர்த்தப்படுவதற்கு அவர் பல்கலைக்கழக வளவுக்கு வெளியிலுள்ள பரமேஸ்வரா கோயிலில் வணங்கி, சிவனின் சக்தியையும் அடையாளங்களையும் பூண்டுதான் உள்ளே வரவேண்டும் என்ற வற்புறுத்தப் பட்டதற்கு இம்மரபே காரணம். சைவரல்லாதார் சிவனின் அடையாளங்களைப் பூணுவது சிவனுக்கும், அவரது சமயத்துக்கும் குற்றமாகும். அவரைக் கொடும்பாவி எரித்து தடுத்தனர்.
தமிழரின் பாரம்பரிய சமயத்தைப் பற்றி யாழ்ப்பாணத்தார் அக்கறை இல்லாதிருப்பதன் காரணம் அவர்கள் பூரணமாய் சமஸ்கிருதமயமாக்கப் பட்டுள்ள நிலைமை ஆகும். எம் இருப்பைத் தக்கவைக்க நாம் தமிழரின் அடையாளத்தை மீட்க வேண்டும். எம் திராவிடத்தை ஏற்கவேண்டும். ஆரியரின் போர் மரபையல்ல, ஆதித்தாயின் கற்பு வாழ்க்கை, மற்றும் விவசாய மரபையும், எம் இயற்கையோடு ஒன்றிய ஆன்மிகத்தையும் மீட்கவேண்டும். இதற்கு பழந்தமிழரின் உயர்ந்த தத்துவ நூல்களையும், வழிபாட்டையும், சிந்தனைச் சுதந்திரத்தையும் மீளாய்ந்து பிள்ளைகளை அவ்வழியில் நடத்துவது அவசியம். இவ்விஞ்ஞான யுகம் புத்தியாய் யோசித்து எதிர்காலத்துக்கான பதில்களைத் தேடக் கூடிய காலமாகும்.
தமிழ்நாட்டின் தமிழ் அடையாள விளிப்பு இங்கும் பரவுமா?