அனுர அலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உருவாக்கும் மாற்றுப் பாராளுமன்றம் – ரணில் புதிய திட்டம் !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை(நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வி உருத்திர குமார் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றத்தை உருவாக்கி பிரதமர் ஆனார். இங்கே நாட்டிற்குள் மாற்றுப் பாராளுமன்றம் அமைத்து ரணில் ஜனாதிபதியாக விரும்புகின்றார்.
இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த உறுப்பினர்களிடமிருந்து அரசாங்க அமைச்சகங்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களுக்கு இலங்கையின் மாற்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட என்.பி.பி அனுர குமாரவின் அலையினால் மூத்த அரசியல் தலைவர்கள் உட்பட இருநூற்றுக்கும் அதிகமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். மேலும் கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற 160 வரையானோர் இந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறாமை உலக அரசியல் நிபுணர்களை வியப்படைய செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனநாயக தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்ட அத்தனை அரசியல்தலைவர்களும் ஓர் மாற்றுப்பாராளுமன்றத்தை உருவாக்கவுள்ளனர் என்ற தகவல் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாத அளவுக்கு பதவி மோகம் அவர்களது கண்களை மறைத்துள்ளது.