என்.பி.பி அரசிலும் தொடரும் வனவள – தொல்லியல் திணக்களங்களின் அத்துமீறல்
வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி வாக்குறுதி வழங்கியதாக வன்னி பா.உ ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.உ ம.ஜெகதீஸ்வரன் கருத்து வெளியிட்ட போது, “யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனவள திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லையிடப்படும் நடவடிக்கையின் போது பொதுமக்களுடைய விவசாய காணிகள் உட்பட பல காணிகள் வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டது.
அவை வனவள திணைக்கத்தால் விடுவிக்கப்படாமையால் பொதுமக்கள் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாதுள்ளனர். திணைக்களங்களும் அபிவிருத்தி சார் திட்டங்களினை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சர், வனவள பாதுகாப்பு ஆணையாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாடப்பட்டது. அதன்போது இதற்கான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் வனவளத்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்வது மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த அரசாங்கங்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.பி.பி அரசாங்கமும் இது தொடர்பில் இன்றுவரை அமைதிகாத்து வருகின்றமை ஏமாற்றமளிப்பதாக தமிழ் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கிழக்கில் திருகோணமலையின் வெருகல் பகுதியில் தொடரும் தொல்லியல் திணக்களத்தின் நில அபகரிப்பு தொடர்பிலும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.