குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாதபடிக்கு யாழ்.மக்களிடம் ஒழுக்கமின்மை அதிகரித்து கிடக்கிறது – ஆளுநர் வேதனை !
இது எங்களின் நகரம். நாங்கள் வாழும் நகரம். வாழப்போகும் நகரம் என்பதை ஒவ்வொருவரும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
கிளீன் சிறீலங்கா செயற்றிட்ட முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ் ‘நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம்.
கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம் செய்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. துப்புரவு செய்த மறுநாளே குப்பைகளை அந்த இடங்களில் பொதுமக்கள் கொட்டுவதால் சுத்தம் செய்ததன் நோக்கம் நிறைவடையாத சந்தர்ப்பங்களே அதிகம் என்றார்.
மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட ஆளுநர், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புத் தரப்பினர் தமது படையினரை இந்தச் செயற்றிட்டத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால் குப்பைகளைப் போடும் மக்களும் உணரும் வகையில் அவர்களையும் இந்தச் செயற்றிட்டத்தில் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.