கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !
கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் 2 சதவீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் இருப்பதாக சூழலியல் ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் தெரிவிக்கின்றார். கண்டாவளை மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு கிராமங்களிலும் யாழ் மாவட்டத்திலும் குடி நீரால் வருகின்ற பிரச்சினை காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் கள்ள மண் தொடர்பிலும் கண்டாவளையின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கின்றது. கண்டாவளை பா உ சிறிதரனின் வாக்கு வங்கிகளில் ஒன்று. நெடுந்தீவைப் பூர்விகமாகக் கொண்ட சிவஞானம் சிறிதரன் வட்டக்கட்சியில் வாழ்ந்தவர். கண்டாவளையில் மணம் முடித்தவர். தற்போது யாழ் நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.
யாழ் மற்றும் கிளி மாவட்டங்களில் குடிநீர் பாரிய பிரச்சினையாகி வருகின்றது. அதனால் மக்கள் பாராதூரமான நோய்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளுக்கு இலக்காகியும் வருகின்றனர். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தனபாலன் ரவி, “என்னுடைய சகோதரி வட்டக்கட்சியில் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தனது 20வது வயதில் மிகத்துன்பப்பட்டு காலமானார். சில ஆண்டுகளுக்கு முன் எனது இன்னுமொரு சகோதரியின் கணவர் சிறுநீராக நோயினால் வட்டுக்கோட்டையில் காலமானார். தற்போது அவருடைய மகளுக்கு 30வது வயதில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுச் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர்பிழைத்துள்ளார்” எனத் தெரிவித்தார். இதைவிடவும் எனது உறவுகளுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் உள்ளனர். மாற்றுச் சிறுநீரக சிகிச்சையை மேற்கொள்ள ஒரு கோடி 50 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் நிலத்தடி நீரோடு கலந்து கிணறுகளை வந்தடைகிறது. யாழில் உள்ள சுண்ணாம்புக்கற் கொறைகளினூடாக மலசல மற்றும் கழிவுகளும் கிணற்று நீரை அடைகின்றது. நீரால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கோளாறு மற்றும் பல்வேறு நீர் சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே காரணமாகின்றது.
இதன் காரணமாகவே குழாய் மூலமாக குடிநீரை வழங்க ஆசிய அபிவிருப்பி வங்கி இருபது ஆண்டுகளுக்கு முன்னரேயே நிதியை வழங்கி அதற்கான திட்டங்களை ஆரம்பிக்க உதவியது. துரதிஸ்டவசமாக ஊழல் மோசடி யாழ் – கிளி அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் பணத்தை வாரிக் கொண்டு சென்றதைத்தவிர குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வைக்கப்பட வில்லை.
தற்போது பாராளுமன்றம் சென்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இதற்கான தீர்வொன்றை வைக்க வேண்டும். இவர்கள் யாழ் – கிளி குடிநீர்ப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப் போகின்றார்கள் எனபதைத் தெரியப்படுத்த வேண்டும். வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தங்களுடைய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.