கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அடக்குமுறையை பிரயோகிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் ஜனவரி 24 மாணவர் ஒன்றியத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் அவருக்கு வாக்களித்த காமுக விரிவுரையாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது. விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதுமுக மாணவர்களுடைய வட்ஸ் அப் குழு உரையாடல்களை சட்டத்திற்குப் புறம்பாக ஒட்டுக் கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் தாம் கற்க விரும்பும் பாடங்களை கற்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காதபட்சத்தில் போராட்டங்கள் மூலம் தமது கோரிக்கைளை முன்வைப்போம் என்று தமக்கிடையே வட்ஸ் அப் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பேராசிரியர் கணேசலிங்கம் போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்கு பொங்கு தமிழ் போன்ற போராட்டங்களுக்கு அணிதிரட்டியவர்கள் . அப்படியிருக்க கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்காதபடி மாணவர்களுக்கு தடை விதிப்பது அதிகார துஸ்பிரயோகம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பல்கலைக்கழகத்தினுள் இருந்த 5 கல்லாசனங்களை கலைப்பீடாதிபதி ரகுராம் உடைத்தெறிந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ரகுராம் தரப்பில் கூறப்படுவதாவது அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் இரவில் போதையில் கல்லாசனத்திலிருந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த கலைப்பீடாதி ரகுராம் மாணவர்களின் செயலால் கோபமடைந்து சினிமா பாணியில் கல்லாசனத்தை உடைத்துள்ளார். இது தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைகளில் மாணவர்கள் நலன்சார்ந்து பேச வேண்டிய மூத்தவை மற்றும் பேரவை என்பன மௌனமாகவுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் மலிந்து போயுள்ள வினைத்திறன் அற்ற யாழ்ப்பல்கலைக்கழக நிர்வாகத்தை தட்டிக் கேட்கவே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் எனக் கூறுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலேயே 10 கல்லாசனங்கள் கலைப்பீடாதிபதியின் அனுசரனையில் பொருத்தப்பட்டதாக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய முகநூலில் பதியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓன்று: விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இரண்டு: போராடுதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மூன்று: விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் பாரபட்சமின்றி விசாரணை செய்யப்பட வேண்டும்
நான்கு: மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்யப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *