கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க
கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச்சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு எல்லாம் உடந்தையாக இருக்கின்றனர், தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிவஞானம் சிறிதரனின் இடது வலது கரங்களும் இவற்றுடன் தொடர்புற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்து வந்தார். தற்போது அவர் பொலிஸார் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை யாழ் பா உ க இளன்குமரனும் முன்வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்காவும் கிளிநொச்சி பொலிஸார் மீது வைத்துள்ளார்.
கிளிநொச்சி – இராமநாதபுரம், வவுனியா – ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, வடக்கில் விரும்பத்தகாத செயற்பாடுகளால் பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்இ உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன. தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்இ கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.