40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு
வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வரவு ,செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை. எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.