வன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.
செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்
இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.
மேலும், தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம், செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம், முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.
தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது குறித்தும் சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.
முஹம்மட் பரீட்
தேசம் நெட், சிந்தனை வட்டம் இணைந்து நடைமுறைப்படுத்தும் இத் திட்டத்தைப் பாராட்டுகிறோம்.
இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் நிலையும், மாணக்களின் பரிதாபத்தையும் நேரடியாகப் பார்க்கும் போது…..
இது விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடிய காலமல்ல
ஜெயபாலன் அண்ணா
இது விடயமாக இலங்கைத் தொடர்பிற்கும் முகவரி ஒன்றைத் தந்தால் தங்களால் கட்டப்படும் குருவிக்கூட்டிற்கு சிறு துரும்புகளையாவது எமக்கும் சேர்க்க முடியும் அல்லவா?
தங்கள் முயற்சிகள் தரம் 5 உடன் முடிந்து விடாமல் தேவை உணர்ந்து பல்கலைக்கழக மட்டம் வரை தொடருங்கள்
– முஹம்மட் பரீட் –
பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனை
Thirumalaivasan
நூல்கள் சென்றடைந்தமை அறிந்து மகிழ்ச்சியேயாயினும் அவற்றை மாணவர்கள் பயன்படுத்தும் கட்புல ஆதாரங்களை திரு மேகநாதன் வழங்குவது எதிர்காலத்தில் இத்தகைய உதவிகளை மன நிறைவுடன் புகலிடத்திலிருந்து மேற்கொள்ள உதவியாகவிருக்கும். வெறும் கடிதத்தொடர்புகளின் புனகப்படப்பிரதியாக மட்டுமில்லாமல் இந்த நிவாரண உதவி சென்றடையும் மறுமுனையின் பயனீட்டாளனான மாணவர்கள் புன்னியாமீனின் நூல்களை வாசிக்கும் புகைப்படங்களை வெளியிடுங்கள். அதுவும் முகாம் பின்னணியில் இருந்து இவை வெளிவரவேண்டும். புகைப்படம் எடுப்பது முகாமில் தடைசெய்யப்பட்டிருக்கலாம். ஆயினும் முகாம் புகைப்படங்கள் இன்று இணையத்தளங்களில் வெளிவராமல் இல்லை. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு கல்வி அதிகாரி என்றதால்> மேலதிக உதவிகளைத் தேடி எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழர்களை நாடி அவர் நிச்சயம் வருவார் என்பதால் இத்தகைய ஆதாரங்களை அவர் முயன்று பெற்று வழங்குவது அவருக்கும் நல்லது லிட்டில் எயிட் திட்டத்திற்கும் நல்லது.