மாகாண சபையிலும் கை வைக்க மாட்டோம். தையிட்டி விவகாரத்தில் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட மாட்டோம்.” – இராமலிங்கம் சந்திரசேகர் !
இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த போது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில்,
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.
அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும்.
முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதாகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்