பங்களாதேஷ் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைபற்றி ஜெயலலிதா படித்துப்பார்க்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் உருவாக்கத்தின் போது இந்தியா வழங்கிய பங்களிப்பைப் போன்று இலங்கைக்கு படைகளை அனுப்பி தமிழர்களுக்கு மிக நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு தனி ஈழத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது தொடர்பாக வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜெயலலிதாவுடைய இக்கூற்று முற்றிலும் பொறுப்புணர்வற்றதாகும் என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் இடம்பெற்ற இராணுவ தொடரணி மீதான தாக்குதல் சம்பவம் தெடர்பில் அவர் கருத்து வெளியிட்டபோது, இது மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும். மாநிலத்தில் கடந்த 20 வருடங்களாக தணிந்திருந்த நக்ஸலைட்டுகள் போன்ற வன்முறைக்குழுக்கள் மீண்டும் அவர்களது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது ஒரு பாரதூரமான செயல் என்பதை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்; மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இந்நிகழ்வை மிகுந்த எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும் என்றார்.
பெரியார் திராவிடக்கழகம் போன்ற அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டுமா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர், நான் உள்துறை அமைச்சர் என்றவகையில் அது தொடர்பாக கருத்துக்கூற விரும்பவில்லை. என்றாலும் ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகன் என்றவகையிலும் ஒரு அரசியல் கட்சியின் உறுப்ப்னர் என்றவகையிலும் இது ஒரு பாரதூரமான விடயம் என மக்களை எச்சரிக்கின்றேன் என்றார்.
இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விமர்சனம் குறித்து வினவப்பட்டபோது, ஒரு நாடு அதன் அயல் நாட்டில் ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எடுக்க முடியுமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.