ஐ.நா. இலங்கையின் மோதல் சூன்யப் பகுதியில் 50 ஆயிரம் பொதுமக்கள் வரை சிக்குண்டிருக்கும் நிலையில் அங்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து ஐ.நா. தொடர்ந்தும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபையின் உத்தியோகப்பற்றற்ற அமர்வுகளுக்கு மட்டுமே ரஷ்யா இணங்கியிருப்பதாக ஐ.நா.விலுள்ள ரஷ்யத்தூதுவரும் இந்த மாதம் பாதுகாப்புச் சபையின் தலைவருமான சேர்க்கின் கூறியுள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் நிருபர்களை திங்களன்று சந்தித்த ஐ.நா. வின் பேச்சாளர் மேரி ஒசாவே இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்;
மோதல் வலயத்திற்குள் இருப்போரிடமிருந்து கிடைத்த அறிக்கைகளின் பிரகாரம் மோதல் அதிகரித்திருப்பதாகவும் மென்ரக, கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மோதல் வலயத்திலிருந்து 1 இலட்சத்து 88 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். 1,8600 பேர் முகாம்களில் உள்ளனர் .காயமடைந்த 1700 பேரும் அவர்களை பராமரிப்போரும் ஆஸ்பத்திரிகளில் உள்ளனர். ஏப்ரல் 27 இற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களுக்கு வந்துகொண்டிருப்பதாக அறிக்கை இல்லை. எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது கள நிலை யதார்த்தமாக இருக்கலாம் என்றும் மேரி ஒகாபே கூறியுள்ளார்.
இதேவேளை, இன்னர் சிற்றி பிரஸ் ஐ.நா.வின் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபைத் தலைவர் சேர்க்கினிடம் ஐ.நா. வின் மாதாந்த நிகழ்ச்சி நிரலில் ஏன் இலங்கையின் யுத்தம் குறித்து சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை தொடர்பான கூட்டத்தை சபையின் மண்டபத்தில் அல்லது ஆலோசனை அறையில் நடத்துவதற்கு ரஷ்யா ஏன் தடையாக இருக்கின்றது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு பாதுகாப்பு சபைத் தலைவர் சேர்க்கினிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சேர்க்கின், ஐ.நா.வின் அடித்தளத்தில் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களுக்கு ரஷ்யா இணங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசு கடுமையானதும் கடினமானதுமான பகைவருடன் சண்டையிடுவதாகவும், (அந்த எதிரி) பயங்கரவாத அமைப்பென பல தரப்புகளால் உத்தியோக பூர்வமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மத்திய கிழக்கிலும் சிலர் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறார்களே அது எவ்வாறு? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.