அர்ச்சுனா காமெடி பீஸா – என்பிபி யாழ் எம்பிக்கள் கத்தரித் தோட்ட வெருளிகளா ? தொடரும் பனிப்போர் !
பா. உ அர்ச்சுனா இராமநாதன் ஒரு காமெடி பீஸ் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு காமெடியன் குறிப்பாக சொல்லப்போனால் கவுண்டமணி செந்தில் போன்ற ஒரு காமெடியன் என யாழ்.மாவட்ட என்.பி.பி பா.உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, யாழ்ப்பாண மக்கள் மூன்று கத்தரி தோட்டத்து வெருளிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்.பி.பி பா.உக்களான இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சிறீபவானந்தராஜா ஆகியோரை குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து என்.பி.பி யாழ்ப்பாண பா.உக்களும் வகைதொகையின்றி பா.உ அர்ச்சுனாவை ஊடகங்கள் முன்பாக விமர்சித்து வருகின்றனர். அண்மையில் பா. உ இளங்குமரன் இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் ரஜீவன் அர்ச்சுனாவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் பா.உ ரஜீவன் மேலும் தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு பாராளுமன்ற உயரிய சபையில் எவ்வாறு பேச வேண்டும் என்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்ற தெரியாத ஒரு நபராகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காணப்படுகின்றார்.. யாருக்கும் யாரையும் விமர்சிக்கின்ற உரிமை இருக்கின்றது ஆனால் அதனை நாகரீகமான முறையில் கையாள வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு கையாளாது தரக்குறைவாக கருத்துகளை தெரிவிப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குறிய அடிப்படை தகுதி கூட இல்லாத ஒரு நபராகவே காணப்படுகின்றார் .
அவர் கடந்த காலங்களில் மத குருமார்களை, அமைச்சர்களை, ஜனாதிபதியை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கேலி செய்வது அவருடைய தொழிலாக இருந்தது வருகின்றது , மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் மக்களுக்கு சேவை எதுவும் செய்யாது இவ்வாறான விமர்சனங்களை செய்து கொண்டு தன்னை ஒரு காமெடியனாக காட்டிக் கொண்டு திரிகின்றார். எனவே அவரைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தார்.