வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தை அமைக்காமல் கடந்த காலங்கள் போல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டுக்கள் இருக்கக்கூடாது என அரசு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட்டுவாகல் புனரமைக்கப்படுவது எத்தனை முக்கியமோ அதனை விட முக்கியமானது அந்த பாலம் கூறும் வரலாற்றை பாதுகாப்பது எனவும் குறைந்த பட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் முன்வைத்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள ஊடகவியலாளர் குமணன், சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) – இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .
ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.
குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial ) போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.facebook.com/share/p/1HG2BPgCWR/