போரில் பிரபாகரன் தோல்வியடைந்துள்ளதால் மேலைத்தேய நாடுகள் ஆத்திரமடைந்துள்ளன. அமெரிக்கா பிரபாகரன் மீது காட்டும் கருணையை பின்லேடன் மீது ஏன் காட்டவில்லையென ஹெல உறுமய எம்.பி.எல்லாவெல மேதானந்த தேரர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் புலிகளை தடைசெய்துள்ள போதும் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு தமது நாடுகளில் அனுமதியளித்துள்ளன. நமது நாடுகளில் பயங்கரவாதம் இருக்கக்கூடாதென நினைக்கும் இந்த நாடுகள் எமது நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது.
தற்போது போரில் பிரபாகரன் தோல்வியடைந்துள்ளதால் மேற்கத்தைய நாடுகள் ஆத்திரமடைந்துள்ளன. இதனால் அமெரிக்கா எமக்கான நிதியுதவிகளை தடுக்கப்பார்க்கின்றது.
அமெரிக்காவின் கைப்பொம்மையாக ஐ.நா. செயற்படுகின்றது. இதனால் ஐ.நா. எமக்கு அழுத்தம் கொடுக்கிறது. பிரிட்டன் அவர் மீது குற்றம் சாட்டுகின்றது. ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரபாகரன் மீது இந்த நாடுகளால் கூற முடியாதுள்ளது.
பிரபாகரன் மீது அமெரிக்கா கருணை காட்டுகிறது. இந்தக் கருணையை அமெரிக்கா பின்லேடன் மீதும் காட்ட வேண்டும். மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போட்டு நிர்வாணமாக செயற்படுகின்றன. எந்தவொரு வெளிநாடும் எமது பிரச்சினையில் தலையிட முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம் . இலங்கையை தமது காலணித்துவ நாடாக நினைக்கும் நாடுகள் தமது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.