தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.