மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை !
மன்னார் மாவட்ட குழந்தை நல மருத்துவர் கடமைக்கு வராமல் தலைமறைவானதைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகியுள்ள இந்த மருத்துவர் தனது நண்பரொருவருக்கு அனுப்பிய குறும்செய்தியில் வேலையிலிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை பலநாட்களாகியும் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. தொலைபேசியையும் துண்டித்துவிட்டு தொடர்பில்லாமல் இருந்துள்ளார்.
இலவசக் கல்வியில் கற்று மருத்துவத்துறைக்கு வந்தவர்கள் சில லட்சங்களை மாத வருமானமாகப் பெறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் மருத்துவத்துறைக்கு உள்ள பற்றாக்குறையால் அதிக சம்பளத்தால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. இது இலங்கை போன்ற நாடுகளில் மட்;டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போலந்து போன்ற நாடுகளிலும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் புதிய சட்டவிதிமுறைகளையும் அபராதங்களையும் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.
இலவசக் கல்வியில் கற்று வெளியேறுகின்ற இவர்கள் குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் அரச மருத்துவமனைகளில் மட்டும் பணி செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன்னரே இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் ஆரம்பப் பள்ளி முதல் மருத்துவர்களை உருவாக்குவதற்கான செலவின் இரட்டிப்புத் தொகையை அபராதமாகச் செலுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்பது போன்ற விதிமுறைகள் அவசியம் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் இலங்கை மருத்துவ கலாநிதி ஜோசப் பெர்னான்டோ.
அவர் மேலும் குறிப்பிடுகையில். குறித்த குழந்தை நல மருத்துவர் மருத்துவ அசட்டையீனத்துக்காக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் தந்தை தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.