பிரபாகரன் என்ற நபரின் முடிவை உறுதி செய்யும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுவருடத்தை முன்னிட்டு இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகளின் பகுதிக்குள்ளிருந்து எவரும் வரவில்லை. இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் வழங்கப்பட்டும் மக்கள் வரவில்லையானால் ஏழு தினங்கள் வழங்கினாலும் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் கொல்லப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். உண்மையில் மக்கள் மீது இருக்கும் அன்பில், அக்கறையில் அல்ல. அங்கு சிக்குண்டுள்ள புலித்தலைமையை பாதுகாப்பதற்காகவே பேசுகிறார்கள்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் பிரபாகரனுடன் பின்லாடன் மறைந்திருக்கிறார் என்ற செய்தி அமெரிக்காவுக்கு கிடைத்தால் அங்கு பொதுமக்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் விமானத் தாக்குதல் நடத்தும். தாக்குதல் நடத்திய பின்னரே எமக்கு அறிவிப்பார்கள்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்கள் மறைந்திருக்கிறார்கள் என்று கூறி அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. திருமண வீட்டுக்கு வந்தவர்கள் என்று கூட பாராமல் இறந்தார்கள். தாக்குதல் நடத்திய பின்னர்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் இலங்கையராகிய நாம் அப்படியல்ல. மக்கள் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டுதான் செயற்படுகிறோம். மக்களுடன் மக்களாக, மக்களை கேடயமாக பயன்படுத்தி மறைந்திருக்கும் புலித் தலைமையை தேடி எமது படையினரும் ஊடுருவி செல்கிறார்கள். இந்த நிலையில் கனரக ஆயுதங்களாலும், விமானத் தாக்குதல்களையும் நடத்துவது எப்படி?