எண்பதுக்களில் தாயகத்தின் குரலாக இருந்த ஆனந்தி அக்கா பிற்காலத்தில் புலிகளின் குரலாகி மௌனித்துக் கொண்டார் ! : தேசம் த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் முற்பகுதியில், இலங்கைப் பேரினவாத அரசுகளின் கொடும் கரங்கள் தமிழ் மக்களை நசுக்கிய நாட்கள். இலங்கையின் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை இலங்கைத் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த காலம். மின்சார வசதியற்ற கிராமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வரவேற்பறைகள். வானொலிகள் கோலோச்சிய காலகட்டம். அன்று பத்திரிகைகளை வாங்கும் வசதி குடும்பங்களில் இல்லை. சனசமூக நிலையங்களில் போய் பத்திரிகை படிக்கின்ற காலம். சன சமூக நிலையங்களிலும் ஒவ்வொரு பக்கத்தை ஒவ்வொருவர் வைத்து வாசிப்பார்கள். தகவலுக்கான கேள்வி மித மிஞ்சியிருக்கும். ஆனால் தகவல் கிடைப்பதற்கான வழிகள் மிக மிக அரிதாக இருந்த அந்தக் காலம்.

விரல் நுனியில் தட்டினால் செய்திவரும் இன்றைய காலத்தில் செய்திகளின் ஆயட்காலம் மிக மிக அரிது. அன்று நிலைமை அவ்வாறில்லை. 1986 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதை அந்த ரெலோ இயக்கப் போராளிகள் அறிந்து உணர்ந்து கொள்ளவே பல மணிநேரம் ஆகியது. ஆவ்வாறான ஒரு காலகட்டத்தில் மக்கள் செய்திகளுக்காக ஏங்கினர்.

பிபிசி தமிழோசையில் ஆனந்தி அக்காவின் குரலால் தாயகத் தமிழர்கள் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல் பிபிசி தமிழோசையில் சங்கர் அண்ணா, விமல் சொக்கநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத்தில் பணியாற்றியவர்கள். விமல் சொக்கநாதன் சில ஆண்டுகளுக்கு முன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை வருத்தத்திற்குரிய பதிவு. இவர்கள் வரிசையில் தாயக மக்களை தன்வசப்படுத்திய மற்றையவர் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி அறிவிப்பாளராக இருந்த ஜெகத் கஸ்பர்.

எண்பதுக்களில் இவர்களின் குரல்களுக்காக மக்கள் தவமிருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களே ஒலிபரப்பாகும் இச்செய்தித் சேவைவைகளினூடாக மட்டுமே வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அன்றை நாட்களில் அப்போதைய இலங்கை அரசு பற்றரிகளைத் தடைசெய்த போது சைக்கிள் டைனமோக்களை வைத்து செய்தி கேட்ட காலங்கள் அது. தமிழ் மக்கள் மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த குரல் பிபிசி ஆனந்தியின் குரல். அதனால் அவர் என்றும் தமிழ் மக்களின் ஒரு செலிபிரேற்றியாகவே வாழ்ந்தார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நெருக்கமானவராகவும் குடும்ப நண்பராகவும் மாறினார். செய்தி சேகரிப்புக்காகவும் அதற்கு மேலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் மிகுந்த நட்பானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேர்கண்ட மிகச் சிலரில் பிபிசி ஆனந்தி அக்கா குறிப்பிடத்தக்கவர். அதைவிட இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப், ஜெகத் கஸ்பர் ஆகியோரும் வே பிரபாகரனை நேர்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் பிபிசி ஆனந்தி அக்கா ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகவே மாறினார். துரதிஸ்ட்ட வசமாக பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்களின் பாத்திரம் இவரோடு முடிவுக்கு வந்தது. ஆனந்தி அக்கா, விமல் சொக்கநாதன் ஆகியோரின் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அதனால் பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்கள் அதன் பாத்திரத்தை இழந்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தனது சொந்த வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். உறவை விபத்தில் இழந்தவர். பிற்காலங்களில் முதமையில் தனது கணவரையும் இழந்தவர். இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். 1970க்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து பின் முழுநேர அறிவிப்பாளராக 2005 ஓய்வுபெறும்வரை இருந்தார். 2025 பெப்ரவரி 21இல் அவர் குரல் மௌனமானது.

ஆனந்தி அக்கா முரண்பட்ட கருத்துடையோருடனும் உறவைப் பேணி வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவர் பற்றுக்கொண்டிருந்த போதும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈபிடிபியினருக்கும் இடையே மோசமான பகைமுரண்பாடு நிலவிய காலகட்டத்திலும், தோழர் டக்ளஸ் தேவானந்தவுடனும் நல்லுறவைப் பேணியவர்.

தமிழ் புலமை மிக்க ஆனந்தி அக்கா தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். தொலைபேசி உரையாடல்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை எனக்கு பாட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் ‘டேய்’, ‘என்னடா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அவர், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு என்னையும் வற்புறுத்தி அழைத்திருந்தார். அவர் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே என்னை அழைத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது என்னருகில் வந்து சொன்னார், “எப்பிடியும் போய் என்னைத் திட்டித்தான் எழுதப்போகின்றாய்” என்று வாஞ்சையுடன் திட்டிக்கொண்டார். நான் பிரித்தானியாவில் அவரைச் சந்தித்த பின் அவரை ஒரு ஊடகவியலாளராக ஒரு போதும் பார்த்ததில்லை.

இடையிடையே தொலைபேசியல் கதைத்துக் கொள்வார். என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் உட்பட. ஒரு சகோதரியாக ஒரு நல்ல பண்பாளராக எனக்கு ஆனந்தி அக்கா மீது எப்போதும் ஒரு கௌரவம் உண்டு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *