AFD யை ஆதரிக்கும் தமிழர்கள்; ஈழத் தமிழர்கள் வலதுசாரிகளா?
21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் வலதுசாரிகள் மிகப் பெரும் வெற்றிகளைப் பெற்று எழுச்சியடைந்து வருகின்றனர். அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு முதல் தடவையாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றமை தீவிர வலதுசாரி அரசியலுக்கு கிடைத்த வரவேற்பு எனலாம். அதேபோன்று 2014 இல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடென கருதப்படுகிற இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு படிப்படியாக இந்த நூற்றாண்டில் பல நாடுகளிலும் எழுச்சியடைந்து வந்த தீவிர வலதுசாரிகள், இன்று அமெரிக்கா, நெதர்லாந்து, ஒஸ்ரியா போன்ற பல நாடுகளில் அரியணையில் அமர்ந்து விட்டனர். ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கடும்போக்குடைய வலதுசாரிகள் பெரும் செல்வாக்குடைய கட்சிகளாக வளர்ந்து வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் ஆட்சி மூன்றாவது தடவையாக நடக்கின்றது. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பொருளாதாரப் பிரச்சினைகளை உலகமே எதிர்கொண்டது. இதனால் உள்நாட்டில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் குடியேறிகள் மற்றும் புலம்பெயர் மக்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் வலதுசாரிகளினால் பரப்பப்படுகிறது. கோப்பிறேட் நிறுவனங்களும் முதலாளிகளும் தமதுக் கெதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்க இந்த கருத்துருவாக்கதை ஊக்குவிக்கின்றன.
அந்தவகையில் ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களில் ஒரு சிலர் இன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான ஏஎப்டியை ஆதரிக்கும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் 2009 இறுதித் யுதத்தின் பின்னரான அரசியல் போக்கில் புலத்திலும் சரி நாட்டிலும் சரி தீவிர வலதுசாரிப் போக்கினை அவதானிக்க கூடியதாக இருப்பதாக சமூக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2009 பின்னர் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசப்படும் கடும்போக்கு தமிழ்த் தேசியம் அல்லது குறுந்தமிழ்த் தேசியம் – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் இனத் தூய்மை வாதம் பேசும் தமிழ் வலதுசாரி சீமானை கொண்டாடும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
எப்படி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முதலிடம் என்கிறாரோ அதேபோன்று ஜேர்மனியில் ஏஎப்டி ஜேர்மனியர்களுக்கு முதலிடம் என்கிறதோ அதேமாதிரி சீமான் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே முதலிடம் என்கிறார். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்கிறார்.
சீமானின் தமிழ் நாஸிஸத்தை இனப்பற்று மற்றும் தமிழ்த் தேசியம் என கொக்கரிக்கும் ஈழத்தமிழர்கள் நாட்டிலும் புலத்திலும் அதிகரித்துள்ளார்கள். அதைவிட கணிசமான அளவு இஸ்லாமிய போபியா ஈழத்தமிழர்களிடையேயும் அதிகரித்துவருகின்ளது. ஒரு பக்கம் வெள்ளாள சாதிய மேலாதீக்க பெருமை பீத்தல்களும் அதன்பாலான வன்முறைகளும் பெருகியுள்ளன.
2009 வரையான ஆயுதப் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த போது நீறு பூத்த நெருப்பாக சாதிய வேறுபாடுகள் அமுங்கியிருந்தன. 2009 பின் சாதிய வெறி கொழுந்துவிட்டெரிகிறது.
வெள்ளாள சாதிப் பெருமை பேசும் பாதாள உலகக் குழுக்களும் கூட யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றன.
இலங்கையில் தமது அரசியல் சுயலாபத்திற்காக தீவிர வலதுசாரி தமிழ்த் தேசியவாதத்தை சில கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் பேசுகின்றன. குறிப்பாக சிவஞானம் சிறிதரன், கனகரட்ணம் சுகாஸ், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இராசையா உமாகரன் என பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இதனை சிங்களத் தரப்பிலும் செய்கின்றனர்.
நாட்டில் நடந்த போரை காரணம் காட்டி சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே இந்த கடும்போக்கு வலதுசாரிச் சிந்தனைகள் மேலோங்கியிருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் பெரும்பாலும் குழுக்களாக பிரிந்து வாழ்கின்றனர். உழுத்துப்போன சாதியை புலம்பெயர் நாடு வரை கொண்டுவந்து தமக்குள்ளேயே பிளவுபட்டு நிற்கின்றனர். புலம்பெயர் நாடுகளிலிருந்து கொண்டு பணம் அனுப்பி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் சாதிய குழுக்களை நடத்துகின்றனர்.
புலம்பெயர் தமிழர்கள் தமக்காக போராடிய முன்னாள்ப் போராளிகளும் மாவீரர்களின் குடும்பங்களும் வறுமையில் வாட கோடிக்கணக்கான பணத்தை கோயில்கள் கட்டவும், கோயில்களை புனரமைப்பு செய்யவும் மற்றும் திருக்குறளுக்கு மண்டபமும் இந்துசமயத்திற்கு கண்காட்சி மையமும் அமைக்க கொட்டுகிறார்கள். மாம்பழத் திருவிழாவில் படைத்த மாம்பழத்தை இலட்சங்கள் கொடுத்து ஏலம் எடுக்கிறார்கள். இத்தகைய தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளை ஆதரிக்க என யாழ் மையவாத வலதுசாரி ஊடகங்களும் துணை போகின்றன.
தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்கள் அல்லாத இஸ்லாமிய மக்களை சந்தேகத்தோடு பார்க்கின்றனர். தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெள்ளையர்களிடம் குட்டு வாங்கிக் கொண்டு சமரசம் செய்து கொண்ட வாழ தயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் சக பிற வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கின்றனர். இந்தப்போக்கு புலம்பெயர் நாடுகளில் இரண்டாம் தலைமுறையினரிடம் குறைவாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி வரும் பேரினவாத மனப்பாங்கு தமிழர்கள் நாம் தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய கலாச்சாரம் , மொழி மற்றும் மதம் மட்டுமே உயர்ந்தது என்ற உயர்வுச் சிக்கல் அதிகரித்திரிக்கின்றது. இதனாலேயே சீமான் போன்ற பிற்போக்குவாதிகளை ஆதரிக்கின்றனர்.
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் “நம்ம பொடியல் ‘’ என்ற தலைப்பில் இசைப்பயணம் மேற்கொண்ட ரப் பாடகர் வாகீசன் இராசையா குழுவினரின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கலந்துரையாடல் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சமூகச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிறுபான்மை மக்களுக்கெதிரான கருத்துக்களை விதைத்து எவ்வாறு மோடி அரசு இந்தியாவில் இந்துத்துவ மத அரசியலை நடத்துவதை விமர்சிக்கும் ஆய்வாளர்கள். ஈழத்தமிழர்கள் இடையே வளர்ந்து வரும் தீவிர தேசியவாத வலதுசாரிச் சிந்தனைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கனடாவில், லண்டனில் தமிழர் ஒருவர் எம்பியானால் கொண்டாடும் புலம்பெயர் தமிழர்கள், சீமான் பேச்சை கேட்டு தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கின்றனர். அதேநேரம் உலகெங்கும் புலம்பெயர்ந்து தொழில் புரியும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடாது என்கின்றனர். கிட்லர் எப்படி யூத இனமக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி யூதர்களை எதிரிகளாக சித்தரித்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார், அதேமாதிரி ஏஎப்டி கட்சி இஸ்லாமியர்களை மற்றும் வெளிநாட்டு மக்களை ஜேர்மனியர்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிக்கின்றது. இதேபாணியை சீமான் தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கையை தமிழத் தேசியத்துக்கு எதிராக நிறுத்தி தனது பிழைப்பு அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்.
ஈழத்தமிழர்கள் மத்தியில் மெல்ல மெல்ல உருவாகி வரும் இந்த தீவிர வலதுசாரி தமிழ்த்தேசிய வாதம் முறியடிக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சரிபிழைக்கு அப்பால் எப்போதுமே பிறிதொரு இனத்தினை முற்றுமுழுதாக வெறுத்து இனவழிப்பு செய்யும் மனநிலையோ கொள்கையோ காணப்பட்டிருக்கவில்லை. அவ்வப்போது பரஸ்பர சந்தேகம், தவறான புரிந்துணர்வு மற்றும் பழிவாங்கல் என தமிழர் தரப்பால் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அத்தாக்குதல் தற்காலிகமானவையாகவும் பிழையான வழிநடத்தல்களாகவுமே காணப்பட்டிருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய போராட்ட இயக்கங்களிடமும் கூட இஸ்லாமிய வெறுப்பு காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் புலிகள் அற்ற தற்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் ஒரு இஸ்லாமிய போபியா காணப்படுகின்றது.
ஜேர்மனியில் வருகிற தேர்தலில் 20 வீத த்திற்கு அதிகமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படும் கடும்போக்கு தேசியவாதம் பேசும் ஏஎப்டி கட்சியை கண்டித்து ஜேர்மன் மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். கிட்லரின் நாஸி ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடம் படித்த ஜேர்மனியர்கள் ஏஎப்டியை வெறுக்கிறார்கள். தமிழர்களும் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 30 வருட யுத்தம் தந்த வடுக்கள் மற்றும் வலிகளை மறக்க கூடாது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் அறம் நிலைநாட்டபட வேண்டும்.