3000 நாட்களை தொட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டமும் அதன் அரசியலும் – மேலுமொரு தாய் மரணம் !
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டம் 3000ஆவது நாளை நேற்று எட்டியது. வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் 3000ஆவது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உருவப்படத்தை தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெவ்வேறு நாடுகளாலும் வெவ்வேறு குழுக்களாலும் தத்தம் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் போராட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. மேலும் இப்போராட்டங்கள் பரவலாக அரசியல் மயப்படுத்தப்பட்டதால் தமிழ்கவி மற்றும் அனந்தி சசிதரன் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்தல் கால பிரச்சாரங்களில், காணாமல் ஆக்கப்படுதலின் வலியை நானும் உணர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஆட்சியமைக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தான் என்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் சில உறவுகள் தங்களுடைய பிரச்சினையை ஐநாவில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டதாகவும் அவ்வாறு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டதால் இவர்களை ஐநாவுக்கு அழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஐநா கூட்டத் தொடரில் ஜனவரி 16இல் கிட்டத்தட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டது போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரயதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடையே மிகுந்த பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மரியதாஸ் பொஸ்கோ தனது மனித உரிமைச் செயற்பாடுகள வைத்து வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து பணம் சேர்த்தார். என்கின்றனர்.
மற்றைய தரப்பினர், கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக அர்ப்பணித்த ஒருவரை தங்களுடைய சுயநலன்களுக்காகக் காட்டிக்கொடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். ஐநா மனித உரிமை அரங்கில் வைத்து சட்டவிரோதமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவருடைய குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற அடிப்படை விதிமுறைகூட மரியதாஸ் பொஸ்கோ விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை யாரும் இதுவரை கேள்விக்கு உட்படுத்துவதாக இல்லை.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் சர்வதேசக் கொடிகளை ஏந்தி, காஸாவில் பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கு உதவிய சர்வதேச நாடுகள் தங்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்று கோருகின்றன. சர்வதேச நாடுகள் உள்ளிட்ட கலப்புப் பொறிமுறையை முன்மொழிந்த அமெரிக்கா நேற்று ஆரம்பித்த ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் ஐநாவுக்கு பேச்சாளர்களை அழைத்து வருகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மார்ச் 23 இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறைக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும்.
இதனிடையே காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார்.
இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதி போரில் இழந்த தமது உறவுகளை தேடி போராட்டம் நடாத்தி வந்த நூற்றுக்கும் அதிகமான பெற்றோர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.