அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளே உள்ளது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா போல் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட உதிரிகள் தான். இவர்களை கட்சி என்ற அடையாளத்துக்குள் கொண்டுவர முடியாது. இதே போல் ஒன்பது கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள் கூட கட்சி என்று வரையறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆய்வாளர் வி சிவலிங்கம்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சியாகக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வி சிவலிங்கம் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சிக் கட்டமைப்பை வைத்துள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு வாக்கு வங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய நலன்களை முன்னெடுப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய உதிரிகளும் கட்சிகளுமல்ல அவர்கள் யாழ் மக்களின் நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை, அவர்கள் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிர், மலையகத் தமிழர்களுக்கு எதிர், ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிர் என்று இருக்கின்ற போது, இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர் வி சிவலிங்கம், இவர்கள் குறும் தேசியவாத வலதுசாரிப் பிற்போக்குசக்திகள் என்றும் இவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.