என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு
கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களுக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளதால் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்ததாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பா.உ செல்வம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்தமை விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து இது தொடர்பில் அவர் தனது தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்த போது,
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்குக்கு அதிக ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். அதனைவிடவும், சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.
பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியது அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும் என்றார்.