அரசியல் தலையீடின்றி மனிதப் புதைகுழி சுயாதீன விசாரணைகள் !
யாழ். அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு அநுர அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டமை தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா தெரிவித்துள்ளார். இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கத் தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.