வட்டுக்கோட்டையில் குறைவில்லாமல் தொடரும் வாள்வெட்டு !
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைய வருடங்களில் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.,வாள்வெட்டு குழுக்கள் பொலிஸாரின் துணையுடன் தைரியமாக உலா வருவதாகவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் பொலிசாரால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை கடந்த ஆண்டு வாள்வெட்டு குழுவின் தாக்குதலுக்கு அஞ்சி கடற்படை முகாமில் தஞ்சமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதிக்கு அருகில் வைத்து இராணுவத்தினரின் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கிளீன் சிறிலங்கா திட்டத்திற்குள் கிளீன் வட்டுக்கோட்டையையும் உள்ளடக்க வேண்டும் என வட்டுக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.