அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்
அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.