ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்புபட்ட “பட்டலந்த அறிக்கை” குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.
அப்போதைய அரசாங்கம் ஜே.வி. பியின் கிளர்ச்சியின் போது கைதான ஜே.வி.பியினரை தடுத்து வைக்கும் முகாமாக பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தை பயன்படுத்தியது. அங்கு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் படுகொலைகள் இடம்பெற்றன என குற்றம் சாட்டப்பட்டது. 1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 1994 இல் சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் அமைத்த பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையே பட்டலந்த அறிக்கை என அழைக்கப்படுகிறது.
1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது. இவ் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமை தொடர்பிலேயே அல்ஜசீராவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சுனில் வட்டகல மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு (al jazeera) வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதுவலை ரணில் விக்ரமசிங்க அரசியல் பாதுகாப்பைப் பெற்று தவிர்த்து வந்த அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.