போர் நடக்கும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்பதா என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்.
“உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியுமானால் அவர் அங்கு செல்வார்” என்று பான் கீ மூன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்துள்ள 2 லட்சம் மக்கள் தங்கியுள்ள முகாம்களை வந்து நேரடியாக பார்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரை தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைத்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்தி, அங்கு மோதல் பகுதியில் திண்டாடும் மக்களுக்கு உணவு மற்றும் உதவிகள் செல்வததற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை திரும்பத் திரும்ப பான் கி மூன் கோரி வந்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடன் சேர்த்து போர் முனையில் ஓர் மூலையில் கொண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐம்பதிதாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படும் மக்களை அங்கிருந்து வெளியேற விடுமாறு பான் கீ மூன் அவர்கள் விடுதலைப்புலிகளையும் கேட்டுள்ளார்.