தமிழ் கட்சிகள் எப்படிக் கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது !
நாடு அனுராவோடு கிராமங்கள் எங்களோடு என்ற கோஷத்தோடு தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது. ஏனைய தமிழ் கட்சிகளும் தாங்களும் உள்ளுராட்சி சபையை வென்றுவிடலாம் என்ற பகல் கனவில் பல்வேறு வழிகளிலும் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கில் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனுர அலைக்கு மேலாக தமிழ் கட்சிகளின் தொடர்ச்சியான ஏமாற்று அரசியல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து ஒதுங்கியே நிற்கின்றனர்.
தங்களுடைய பாராளுமன்ற கதிரைகளை வெல்வதற்காக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் தமிழ் பா உ க்களுடன் தற்போது புதிதாக சுயேட்சைக் குழுவிலிருந்து களமிறங்கி இருக்கும் இராமநாதன் அர்ச்சுனாவும் மக்களை ஏமாற்றும் அரசியலையே செய்துவருகின்றார்.
அர்ச்சுனா இன்னுமொருபடி கீழே சென்று தன்னுடைய கழிசறைத் தனங்களுக்கெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் துணைக்கழைத்து மிகக் கேவலமான அரசியலை மேற்கொள்கின்றார். ஒரு மாற்றத்திற்காக அரச்சுனாவுக்கு வாக்களித்த மக்களைப் பெண்களை அதற்காக வெட்கப்படும் அளவுக்கு அர்ச்சுனாவின் நடத்தையும் பேச்சுக்களும் அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கின் ஒரே பிரதான தமிழ் தேசியக் கட்சியான கட்தமிழரசுக் கட்சி யாருடனும் கூட்டுச்சேர மறுத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு உள்ளுராட்சி சபையில் அதிகாரத்தை நிறுவ யாரோடு ஆட்சி அமைப்பது என்பதை தாங்கள் முடிவு செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஆயதப் போராட்ட அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகியுள்ளது. ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு மற்றுமொரு முன்னாள் போராளி அமைப்பான முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் இணைந்துள்ளது. தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக வடக்கு கிழக்கு எங்கும் அரசியல் கட்டமைப்பையுடைய கட்சியாக ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
கனடாவில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லைமதி தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள் அமைப்புகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைப்புகள் தவறுகள் இழைத்திருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறை மறந்து, அவர்களுக்கெ வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. கே ரி தவராஜா, எம் கே சிவாஜிலிங்கம், அருந்தவபாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களோடு தன்னுடைய வீட்டில் வேலைக்கு அமர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்ந்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட கெ ரி கணேசலிங்கத்துக்காக வாதாடிய சட்டத்தரணி சிறிகாந்தாவும் கூட்டுச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு வட மாகாண சபையின் மிகப் பெரும் ஊழல் மோசடியாளரான பொன் ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்துள்ளார்.
வடக்கில் கூட்டு இப்படியிருக்க கிழக்கிலும் ஒரு கூட்டு உருவாகியுள்ளது. முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் முன்னாள் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கியை இழந்தவர்களே. இந்தக் கூட்டுக்களில் உள்ளவர்களில் இணைந்துள்ளவர்களுக்கு வாக்கு வங்கியே இல்லை. இந்தக் கட்சிகள் பலவும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
மேலும் இந்தக் கட்சிகள் எதுவும் பா உ அர்ச்சுனாவை உள்வாங்க முயற்சிக்கவில்லை. இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்க முன்னரேயே பா உ அர்ச்சுனாவும் மணிவண்ணனும் தெறித்துக் கொண்டனர். பிரேமானந்தாவை கும்பிடும் விக்கினேஸ்வரனின் கட்சி வல்வட்டித்துறையில் சுயேட்சைக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அதாவது வல்வட்டித்துறை நகராட்சியில் சுயேட்சைக் குழவொன்றை ஆதரிக்கின்றது. ஏனைய 16 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது.
பா உ அர்ச்சுனாவுக்கு யாழில் உள்ள உள்ளுராட்சி சபையில் போட்டியிடுவதற்கே உறுப்பினர்கள் போதுமானதாக இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அர்ச்சுனா இன்னுமொருவருடன் இணைந்து பணியாற்ற முடியாதவர் என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரியப்படுத்தி இருந்தார். இவருடைய சுயேட்சைக்குழவில் மிஞ்சியிருப்பது கௌசல்யா நரேன் மட்டுமே. அதனால் அர்ச்சுனாவின் அரசியல் எதிர்காலம் விரைவில் அஸ்தமனத்துக்குச் செல்ல உள்ளது.
ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளினதும் நிலை இதுவே. தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சியாகச் செயற்பட வாய்ப்புள்ளது. நாடு மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழ் கிராமங்களும் அனுராவோடே பயணிக்க முடிவு செய்திருப்பதாகவே தெரிகின்றது.