பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களுக்கென போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு நல்குவது மிக அவசியம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்குண்டு எஞ்சியுள்ள மக்களுக்கென தற்போது ஓசன் கப்பலில் அனுப்பப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்குமென நாம் நம்பவில்லை. அதனால் இம்மக்களுக்கு அதிகளவு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு ஐ. சி. ஆர். சி. ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைப்பதற்குத் தேவையான அளவு உணவுப் பொருட்களும், கப்பலும் எம்மிடமுள்ளன. அவற்றை அம்மக்களுக்குக் கொண்டுசேர்க்க ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசையே எமக்குத் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் :-
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐ. சி. ஆர். சி. மேற்கொள்ள வேண்டும்.
தற்போது அப்பகுதியிலுள்ள நோயாளர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஓசன் கப்பலில் தான் முப்பது மெற்றிக்தொன்படி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கின்றோம். நேற்று முன்தினமிரவும் இவ்வாறு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசை கிடைக்குமாயின் 500 மெற்றிக் தொன் படி உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம் என்றார்.