இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !
இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா..? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா? என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அனுராதபுரத்திலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏன் இந்த அரசாங்கமும் சரி, நாட்டு மக்களும் சரி எத்தனையோ தமிழ் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் கொந்தளிக்கவில்லை என பாராளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன் இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி கேட்டார்.
பட்டலந்த அறிக்கையை உணர்வுபூர்வமாக பார்க்கும் தற்போதைய அரசாங்கம், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான அறிக்கையை ஏன் உணர்வுபூர்வமாக பார்க்கவில்லை எனக் கேள்விப் எழுப்பினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான வெளிவிகார அமைச்சரின் உள்ளக பொறிமுறை விசாரணையை வெட்கக் கேடானது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார். என்பிபி அரசாங்கத்தை எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இரா. சாணக்கியன் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த போது ஏன் இதே கேள்விகளை கேட்கவில்லை என சாணக்கியனின் அரசியல் எதிரிகள் கேட்கின்றனர். மேலும் சாணக்கியனின் ஆசானான சுமந்திரன் போர்க் குற்றத்தை உள்ளகப் பொறிமுறையூடாக விசாரிக்க பச்சைக் கொடி காட்டியதாலே தான் அவர் தமிழ்மக்களின் வெறுப்புக்குமுள்ளானார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருந்த சாணக்கியன், இராஜபக்சவின் முகவரியிலேயே அரசியலுக்கு வந்தவர். இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இராஜபக்ச ஆட்சியிலேயே நடந்தது. அப்போதெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்த சாணக்கியனின் இசைப்பிரியா மீதான திடீர் பாசம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியைக் காப்பாற்றவேயாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
என்னடா வளர்த்த கடா மார்பில் பாயுது என திடுக்கிட்ட நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் சாணக்கியனை செல்லமாக கண்டித்தார். யுத்தம் முடிந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆறின புண்ணை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கக் கூடாது. இப்படியே போனால் இனக்குரோதம் வளரும். ஒரு அரசாக நாங்கள் எல்லாம் ஒன்றாக நிற்போம். மறப்போம் மன்னிப்போம் என்றார் நாமல் ராஜபக்ச.