வவுனியா காமினி வித்யாலய நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் சார்பில் உதவிச் செயலாளர் மங்கள திஸ்ஸ தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று சந்தித்ததோடு 8 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் கையளித்தது. வவுனியா மாவட்ட அராசங்க அதிபர் திருமதி சார்ஸ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேற்படி பொருட்களைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வு வவுனியா இடர் முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.
பிரதமர் அலுவலகத்தின் சமூகப் பணிப் பிரிவு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் மேற்படி நலன்புரி நிலையத்தைப் பார்வையிடுவதற்கென ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். முகாமிலுள்ள மக்களுக்கான மதிய உணவினையும் வழங்கினர்.
வவுனியா காமினி மகா வித்தியாலய நலன்புரி நிலயைத்தில் 781 குடும்பங்களைச் சேர்ந்த 1820 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை வவுனியா மாவட்டச் செயலகம் பெற்றுக்கொடுப்பதுடன் சுகாதாரம், தொலைத்தொடர்பு சேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி நலன்புரி நிலையத்தில் வெசாக் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கொழும்பிலிருந்து பிரபல பாடகர்களான சூரியகுமார் முத்தழகு, கலாவதி சின்னச்சாமி, மேர்ஸி எதிரிசிங்க ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் தமிழ், சிங்களப் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
நலன்புரி நிலையத்தில் உள்ள மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் தமக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் புதுமாத்தளன் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் அகப்பட்டுள்ள தமது உறவினர்களை விரைவாகத் தம்மோடு சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.