யூரீயூப்பர் கிருஷ்ணாவிற்கு மீண்டும் பிணை மறுப்பு !
புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து அதிகப்படியான நிதியை பெற்று வடக்கில் உள்ள யூடியுப்பர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் செய்துவரும் அட்டகாசங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. யூடியுப்பர் எஸ்.கே கிருஸ்ணா பண்டத்தரிப்பில் உதவி கோரிய கணவனை இழந்த பெண்ணின் வீட்டில் இரவு நேரத்தில் சென்று அடாவடியில் ஈடுபட்ட காணொலி வைரலாகி இருந்தது. இதன் பின்னணியில் எழுந்த விமர்சனங்களால் கிருஷ்ணா அப்பகுதி மக்களால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் கிருஷ்ணாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டு 14 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் உள்ள யூடியூப்பர் கிருஷ்ணாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை கோரப்பட்டது. நீதிமன்றம் வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து அதிகப்படியான நிதியை பெற்று வடக்கில் உதவி செய்கின்றோம் என நிதிமோசடியில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டப்பட்டு வந்த கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த யூரியூப்பர் டி.கே. கார்த்திக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட டி. கே. கார்த்திக்கு சமீபத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைதிற்கான காரணம் தொடர்பில் உத்தியோக பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. யூரியூப்பர் கார்த்திக் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த நபருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்திய காரணத்தால் இந்த கைது இடம்பெற்றுள்ளாதாக பேசப்படுகிறது.