விடுதலைப் புலிகளை தடை செய்த உலக நாடுகள் பலவும், புலிகளுக்கு எதிராக தத்தமது சட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; “படையினர் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் சர்வதேச சமூகம் தற்போது அதை தடுத்து நிறுத்தும் வகையில் அழுத்தங்களை கொடுக்கின்றது. உதவிகளை நிறுத்துவோமென கூறியும், போர் குற்றங்களை சுமத்தியும் விடுதலைப்புலித் தலைவர்களை இவர்கள் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
நாம் உண்மையில் இந்த நாட்டை ஆதரிக்கின்றோமென்றால், இந் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்திற்கு ஒன்றுபட்ட செய்தி ஒன்றை கூறவேண்டும். அதாவது, இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள தடை ஏற்படுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு இதை முடிவுக்கு கொண்டுவர இடமளித்து ஒதுங்கியிருக்குமாறு நாம் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்துக்கு கூறவேண்டும். எனினும், இந்த தீர்க்கமான தருணத்திலும் கூட துரதிர்ஷ்டவசமாக எமக்கு அந்த ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
உலகில் பல நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளன. எனினும் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே இன்று புலிக் கொடியுடன் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமது சட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்த தவறிவிட்டன. நோர்வே அரசாங்கமோ அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தை புலி ஆதரவாளர்கள் தாக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இவையனைத்தையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்றார்.