அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !
யாழ்ப்பாணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார். கபிலன் ஏற்கனவே யாழ் மாநகரின் வடிகாலமைப்புத் தொடர்பில் ஆய்வுகளைச் செய்து வந்தவர். அவை தொடர்பில் முன்னைய அரசாங்கங்களிடம் அவற்றை சமர்ப்பித்தும் அவை கருத்திலெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிடல் தொடர்பில் புலமை மிகுந்த ஒருவரை என்.பி.பி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளமை சாலப் பொருத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வேட்பாளர் கபிலன், என்.பி.பியின் வேட்புமனுக்கள் யாழில் அனைத்து இடங்களிலும் எவ்வித விலக்கலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாங்கள் எங்களுடைய மக்களுக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு இவற்றைத் தயாரித்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர் வடக்குக்கு அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் கிராமம் கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் காணிகள் விடுவிப்பு மற்றும் மக்களுக்கு வழங்கிய விரைவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.